top of page

இல்லறமும் இறைசாதனாவும்

கபாடியா பாபாவின் சத்சங்கத்தினாலும், கங்கையைப் பிரதட்சிணம் செய்யும் சாதுக்களின் கூட்டுறவிலும் ராம்சுரத் குன்வரின் சஞ்சலங்கள் சற்றே விலகின. சாதுக்களின் பயண அனுபவங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. சித்த புருஷர்களைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும், யோகிகளைப் பற்றியும், அந்தச் சாதுக்கள் பேசுவதை கவனமாகக் கேட்டார். அவர்களது உபதேசங்களை சாதுக்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் போதும் அவர் ஆவலோடு அவர்களோடு அமர்ந்து உன்னிப்பாகக் கவனிப்பார். சாதுக்களின் சுதந்திரமும், அவர்களின் பிள்ளை மனதும் ராம்சுரத் குன்வரை வெகுவாகக் கவர்ந்தன. ஒருநாள் அவரும் அந்தச் சாதுக்கள் போல் பூரண சுதந்திரத்தோடு தேச சஞ்சாரம் செய்வார் என்று அன்று நினைத்திருப்பாரா என்று தெரியவில்லை.

ராம்சுரத் குன்வரின் தமையனார் மனரக்கன் குன்வருக்கு தேத்திரி தேவி எனும் மங்கையோடு திருமணம் முடிந்தது. ராம்சுரத் குன்வரின் பெற்றோர் தங்களது இரண்டாவது மகனான ராம்சுரத் குன்வரின் வித்தியாசமான வாழ்க்கையைக் கண்டு சற்றே பயந்து தடுமாறினர். கலகலப்பாக இருக்கும் மகன் எப்பொழுதும் ஏதோ யோசனையில் தனிமையிலேயே இருக்கிறானே என்று கவலைப்பட்டனர். திருமணம் செய்து வைத்தால் மீண்டும் பழைய கலகலப்பும், சந்தோஷமும், மகன் அடைவான் என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயித்தனர்.

அச்சமயம் ராம்சுரத் குன்வர் பலியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார், திருமணம் நிச்சயமானது அவருக்குத் தெரியாது. திருமணத் தேதிக்குச் சில நாட்கள் முன்பாக அவர் ஊருக்கு அழைக்கப்பட்டார். ஊர் வந்த ராம்சுரத் குன்வர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். பிரியமான தமையனிடமும், அண்ணியிடமும் கல்யாணத்தை நிறுத்துமாறு வெகுவாகக் கேட்டுக் கொண்டார். பெற்றோரிடமும் தனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை என்று ஜாடைமாடையாகத் தெரிவித்து பார்த்தார். ஆனால் திருமண ஏற்பாடுகள் நிற்கவில்லை. ராம்சுரத் குன்வர் செய்வதறியாது திகைத்தார். திருமணத்துக்குச் சில நாட்களே எஞ்சியிருக்கும்போது ராம்சுரத் குன்வர் அகண்ட கங்கையை இரவு நேரத்தில் நீந்திக் கடந்து மாயமாக மறைந்துவிட்டார்.

மாப்பிள்ளையைக் காணோமென்று ஊரே திரண்டு தேடியது. ராம்சுரத் குன்வர் எவர் கண்ணிலும் படவில்லை. திருமண நாளும் வந்தது. மாப்பிள்ளை காணாமல் போனதால், ராம்சுரத் குன்வரின் தம்பி ராம்தஹின் குன்வர் மாப்பிள்ளையாக்கப் பட்டார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்குத் தன் தம்பியோடு திருமணம் நடந்துவிட்ட செய்தியறிந்த பின்னரே ராம்சுரத் குன்வர் ஊர் திரும்பினார். குடும்பத்துப் பெரியவர்களும், ஊராரும் அவரை வசைபாடினர். ராம்சுரத் குன்வர் அனைவரது ஏச்சுக்களையும் தாங்கிக்கொண்டு மௌனமாக இருந்தார். முடிவில் அவரது தமையனார் அனைவரையும் சமாதானம் செய்து, ராம்சுரத் குன்வரை மறுபடியும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார்.

மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு பின் அவர் இன்டர்மீடியட் கல்வியை அலகாபாத்தில் முடித்தார். அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று குடும்பத்தார் அனைவரும், அவரிடம் மாறி மாறி நிர்பந்தம் கொடுத்து வந்தனர். அதிலிருந்து விடுபட ராம்சுரத் குன்வர் தான் திருமணம் செய்துகொள்ள சில நிபந்தனைகளை விதித்தார். அவர் பெண்ணைப் பார்க்க அனுமதிக்க வேண்டும், பெண்ணோடு பேசவும் அனுமதிக்க வேண்டும், பெண் படித்திருக்க வேண்டும், இவை அவருடைய நிபந்தனைகள்.

ராம்சுரத் குன்வரின் நிபந்தனைகளைக் கேட்ட குடும்பத்தார் அதிர்ந்து போனார்கள். அக்காலத்தில் குடும்பத்தில் உள்ள பெண்கள் மட்டும்தான் திருமணத்துக்கு முன் மணப்பெண்ணைப் பார்க்க முடியும். மணப்பெண்ணோடு பேசவும் முடியும். குடும்பத்தில் உள்ள மற்ற ஆண் பெரியவர்கள் கூட மணப்பெண்ணைத் திருமணத்திற்கு முன் பார்க்க முடியாது. தனது மகனுக்கான மணப் பெண்ணை தந்தையே பார்க்க்க் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு உள்ள காலகட்டத்தில் மாப்பிள்ளை பையன் மணப்பெண்ணை திருமணத்துக்கு முன் பார்ப்பது என்பது சாத்தியமே கிடையாது.

திருமணத்தை தவிர்க்கவே ராம்சுரத் குன்வர் இவ்வாறு சொல்கிறார் என்று அனைவரும் அவரை வசைபாடினர். அவர் நிபந்தனைகளைக் கைவிடவும் கூறினர். எல்லோராலும் நேசிக்கப்பட்ட ராம்சுரத் குன்வர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவரது நிபந்தனைகளை மீறி திருமண ஏற்பாட்டைச் செய்தால் அவர் மீண்டும் ஓடிப்போய் விடுவார் என்ற பயமும் குடும்பத்தாரிடம் இருந்ததால் அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போய் இருந்தனர்.

1930களில் திருமணத்துக்கு இம்மாதிரியான நிபந்தனைகளை மாப்பிள்ளை விதிப்பது மிகவும் விசித்திரமான செய்தி. இந்தச் செய்தி சுற்றுவட்டாரங்களில் வெகு வேகமாகப் பரவியது. படித்த பெண்களும், ஆண்களும் மிகவும் குறைவாக இருந்த அக்காலத்தில் இந்தச் செய்தி அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நர்தராவிலிருந்து சற்றுதூரத்தில் பீகாரில் தஹியா எனும் கிராமத்தில் செல்வந்தரான ஹுக்கும் நாரயண்ராய் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ராம்ரஞ்ஜனி தேவி என்ற ஒரே பெண் குழந்தையும் இருந்தார்கள். மகளை மிகச் சிறப்பாக வளர்த்து வந்தார். செல்ல மகளை ஆறாம் வகுப்பு வரை படிக்க வைத்திருந்தார். பருவம் எய்திய பின் பள்ளி செல்வதை மகள் நிறுத்திக் கொண்டாள். ஹுக்கும் நாராயண்ராயும் அவரது சகோதரரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஹுக்கும் நாராயண்ராய்க்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும், அவரது சகோதரருக்கு இரண்டு மகன்களும் என ஐந்து குழந்தைகள் அந்த வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். குடும்பத்துக்கே குலவிளக்காக அனைத்து குழந்தைகளுக்கும் மூத்தவளாக ராம்ரஞ்ஜனி தேவி இருந்தார். தெய்வீக அழகோடு ராம்ரஞ்ஜனி தேவி செல்லக் குழந்தையாக அந்தப் பெரிய மாளிகையில் ஒரு அரசகுமாரிபோல் வாழ்ந்து கொண்டிருந்தார்.

மணப்பருவம் எய்திய தனது மகள் ராம்ரஞ்ஜனி தேவிக்கு தகுந்த வரன் பார்க்க ஹுக்கும் நாராயண்ராய் தீவிரமாக முயற்சி எடுத்து வந்தார். படித்த வரன்கள் கிடைப்பது மிகவும் அபூர்வம் என்று இருந்த காலத்தில் படித்த ஒரு பையன் தனது திருமணத்துக்கு வினோதமான நிபந்தனைகள் விதித்திருப்பதை தனது நண்பர் மூலம் கேள்விப்பட்ட ஹுக்கும் நாராயண்ராய் நர்தரா சென்று பையனைக் குறித்து விசாரித்தார். பின் நேரிலும் பையனைப் பார்த்தார். பையனின் குணநலன்களும் படிப்பும் அவரை மிகவும் கவர்ந்தன.

பையனின் கம்பீரமானத் தோற்றத்தைப் பார்த்து வியந்த ஹுக்கும் நாராயண்ராய் அவரது நிபந்தனைகளுக்கு உடன்பட்டார். ராம்சுரத் குன்வரின் தகப்பனாரைச் சந்தித்து, பையன் தன் மகளை பார்ப்பதற்கும் பேசுவதற்கும் தனது நண்பர் வீட்டில் ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ராம்சுரத் குன்வரின் தகப்பனார் தனது மூத்த மகனான மனரக்கன் குன்வரை ராம்சுரத் குன்வரோடு தஹியா அனுப்பி வைத்தார். ராம்சுரத் குன்வரின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன. எனவே, அவரால் இப்போது எந்த மறுப்பும் சொல்லமுடியவில்லை. ஹுக்கும் நாராயண்ராய் மாப்பிள்ளை பையனையும், அவரது தமையனையும் தஹியா அழைத்துச் சென்றார். அங்கே நண்பரின் வீட்டில் அவர்களைத் தங்க வைத்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றார்.

தன் மனையிடம் ஹுக்கும்நாராயண்ராய் பெண் பார்க்க மாப்பிள்ளை வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார். மனைவி அதிர்ந்து போய்விட்டார். மாப்பிள்ளை வீட்டுப் பெண்களே வராமல் மாப்பிள்ளைப் பையனும், அவரது தமையனாரும் மட்டும் பெண் பார்க்க வந்த செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தது. ஹுக்கும் நாராயண்ராய் அவரைச் சமாதானப்படுத்தி, பக்கத்துவீட்டு நண்பருக்குச் சில இனிப்புகள் கொடுத்து அனுப்பும் சாக்கில் பெண்ணை அங்கே அனுப்புமாறு கூறினார். அவரது மனைவியும் அவர் சொற்படியே ராம்ரஞ்ஜனி தேவியிடம் சில இனிப்புப் பதார்த்தங்களைக் கொடுத்து பக்கத்து வீட்டில் கொடுத்துவரச் சொன்னார்.

இனிப்புகளை எடுத்துக் கொண்டு ராம்ரஞ்ஜனிதேவி அங்கே சென்றார். நண்பரின் வீட்டு வாசலில் ராம்சுரத் குன்வர் அம்ர்ந்திருந்தார். ராம்ரஞ்ஜனி தேவி நேரே வீட்டினுள் சென்று தன் தாயார் கொடுத்தனுப்பிய இனிப்புப் பதார்த்தங்களை, தகப்பனாரின் நண்பரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு வெளியேற முயற்சிக்கும்போது, நண்பர் வாசலில் அமர்ந்திருந்த ராம்சுரத் குன்வரை ராம்ரஞ்ஜனி தேவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராம்ரஞ்ஜனி தேவி, ராம்சுரத் குன்வருக்கு வணக்கம் சொன்னார். “உன் பெயர் என்ன?” ராம்சுரத் குன்வர் கேட்டார். “ராம்ரஞ்ஜனிதேவி” பதில் வந்தது.

“என்ன படித்திருக்கிறாய்?” ராம்சுரத் குன்வர் மீண்டும் வினவினார்.

“ஆறுவரை படித்திருக்கிறேன்” வெட்கத்தோடு சொல்லிவிட்டு விரைவாக ராம்ரஞ்ஜனி தேவி தன் வீட்டுக்கு ஓடிச் சென்றுவிட்டார்.

பெண்ணைப் பார்த்தாயிற்று, பெண்ணிடம் பேசியாயிற்று, பெண்ணும் படித்தவள்தான். தெய்வீக எழில் பொருந்திய பெண்மணி அவள். நிபந்தனைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. இனி திருமணம் வேண்டாம் என்று என்ன காரணம் சொல்லமுடியும்? இந்தப் பெண் பார்க்கும் படலத்தை ராம்ரஞ்ஜனி தேவி அவர்கள் என்னிடம் தன்னுடைய 81வது வயதில் விவரிக்கும்போது, அவரது முதிர்ந்த தெய்வீக முகம் நாணிச் சிவந்து மலர்ந்துவிட்டது. அக்காலத்தின் நினைவில் சிறிதுநேரம் அவர் தன்னை மறந்து மூழ்கியிருந்தார்.

22.7.1938 அன்று தஹியாவில் திருவளர்செல்வன் ராம்சுரத்குன்வருக்கும், திருவளர்செல்வி ராம்ரஞ்ஜனி தேவிக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. புதுமணத் தம்பதிகள் சில நாட்கள் தஹியாவில் இருந்துவிட்டு பின் நர்தரா சென்றனர். அங்கே சில நாட்கள் இருந்த பின்னர் மீண்டும் தஹியா சென்று ராம்ரஞ்ஜனி தேவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ராம்சுரத் குன்வர் அலகாபாத் சென்று இண்டர்மீடியட் படிப்பைத் தொடர்ந்தார். 1939ல் இண்டர்மீடியட் படிப்பை முடித்தார். அதே வருடம் அலகாபாத்தில் உள்ள இவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ.,படிப்பில் சேர்ந்தார். ஆங்கில இலக்கியமும், உலகவரலாறும் அவருடைய தேர்வுப் பாடங்களாக இருந்தன. 1941ம் ஆண்டு பி.ஏ., பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

ஆன்மீக விசாரங்களில் ராம்சுரத் குன்வர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தாலும், கல்வியில் அவர் சற்றும் சளைக்கவில்லை. எதையும் கற்பதில் அவர் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். வாலிபால் விளையாட்டிலும் அவர் தேர்ச்சி அடைந்தார். மல்யுத்தத்தில் அவர்மிகவும் திறமை படைத்தவராக இருந்தார். பயமே அறியாத ராம்சுரத் குன்வர் மிகவும் வலிமையான தேகத்தையும், மென்மையான ஹிருதயத்தையும் கொண்டிருந்தார். பிரவாகமாகப் பொங்கும் கங்கையை சர்வசாதாரணமாக நீந்திக் கடப்பார். கொடிய மிருகங்கள் வாழும் அடர்ந்த வனத்தில் தன்னந்தனியாக சஞ்சாரம் செய்வார். 1940ல் அலகாபாத் பல்கலைக்கழகம் அவருக்கு கீழ்கண்டவாறு சான்றிதழ் அளித்தது.

“திரு. ராம்சுரத் குன்வர் ஒரு நல்ல மாணவனாகவும், கடின உழைப்பும், சிரத்தையும் கொண்டவராகவும் சிறப்பாக உருவாகியுள்ளார். ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான இளைஞன். வாலிபால் விளையாட்டு வீரன், குறிப்பிடத்தக்க மல்யுத்த வீரன், கடமை உணர்ச்சியும், கட்டுப்பாட்டையும் வரமாகப் பெற்ற ராம்சுரத் குன்வரை தைரியமாக நம்பலாம்.”

திருமண வாழ்வும், கல்லூரிப் படிப்பும் ராம்சுரத் குன்வரின் ஆன்மீக விசாரத்துக்குத் தடையாக நிற்கவில்லை. மாறாக, திருமண வாழ்வும் கல்லூரியில் அவர் படித்த ஆங்கில இலக்கியம் மற்றும் உலக வரலாறு பாடங்கள் அவரது ஆன்மீக வாழ்வுக்கு உறுதுணையாகவே இருந்தன. நாட்டின் சுதந்திர வேட்கையும், மத நல்லிணக்கமும் அவரது சிந்தனையில் தீவிரமடைந்தன. மாமனார் இல்லம் செல்லும் போதெல்லாம் அவ்வூரில் ஓடும் பாலன் நதியின் கரையோரமாக அடர்ந்த வனத்தில் சஞ்சாரம் செய்தும், அங்கு தனியாக இருந்த சிவன் கோயிலில் அமர்ந்து ஏகாந்த சுகத்தை அனுபவித்தும் வந்தார். கல்லூரியில் நண்பர்களோடு நாட்டின் சுதந்திரம் குறித்து தீவிர விவாதமும் செய்து வந்தார்.

1940களின் ஆரம்பத்தில் பருவ மழை காலத்தில், கொட்டித் தீர்த்த பெரும் மழையால் ராம்சுரத் குன்வரின் வீடு முற்றிலும் சேதாரமடைந்தது. குடும்பத்தின் 30 ஏக்கர் விவசாய நிலத்தின் பெரும்பகுதியைக் கங்கா மாதா தனதாக்கிக் கொண்டாள். குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. நர்தராவில் சற்றே மேடான பகுதியில் தனக்கு இருந்த ஒரு சிறு மனையில் சிறியதாக ஒரு வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டு ராம்சுரத் குன்வரின் தந்தை ராம்தத் குன்வர் தன் பெரிய குடும்பத்தோடு குடிபுகுந்தார். விவசாய நிலங்களை கங்கை அன்னை விழுங்கியதாலும், தான் நெடுங்காலம் வசித்து வந்த பெரிய வீடு சிதிலமடைந்துபோய், ஒரு சிறிய வீட்டில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும், ராம்சுரத் குன்வரின் தந்தை ராம்தத் குன்வர் மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகளில் காலமானார். ராம்சுரத் குன்வரின் தாயாரும், தந்தை இறந்த சில மாதங்களில் இறந்து போனார். மூத்த மகன் மனரக்கன் குன்வர் குடும்பப் பாரத்தைச் சுமக்க ஆரம்பித்தார். அவரும் அவரது இளைய சகோதரர் ராம்தஹின் குன்வரும் மீதம் இருந்த விவசாய நிலத்தில் பாடுபட்டனர். வரக்கூடிய சொற்ப வருமானத்தில் குடும்பம் பிழைத்திருந்தது.

பி.ஏ., பட்டப் படிப்பு முடித்திருந்த ராம்சுரத் குன்வருக்கு வேலை கிடைக்கவில்லை. அவர் தன் மனைவி ராம்ரஞ்ஜனி தேவியோடு நர்தராவில் தனது மற்ற சகோதரர்களோடு வாழ்ந்து வந்தார். குடும்பத்தில் தம்பி ராம்தஹின குன்வரின் மனைவி தல்கிரீயா தேவியின் சீண்டுதல்கள் ராம்சுரத்குன்வரையும், ராம்ரஞ்ஜனி தேவியையும் மிகவும் புண்படுத்தின. தன்னைத திருமணம் செய்யாது ஓடிப்போன ராம்சுரத் குன்வர் மீது தல்கிரீயா தேவி கடுங்கோபத்திலிருந்தார். ‘குடும்பத்தினர் அத்தனை பேரும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்து, ராம்சுரத் குன்வரை படிக்கவைத்தும், அவர் குடும்பத்துக்காக எதுவுமே செய்வதில்லை’ என்று எப்பொழுதும் தல்கிரீயா தேவி குறைபட்டுக்கொண்டும், கோபப்பட்டுக்கொண்டும் இருந்தார். அவரது கோபத்தை ராம்ரஞ்ஜனி தேவி மீது அதிகமாகக் காட்டினார். மேலும், ராம்சுரத் குன்வர் தனது சகோதரர்களோடு நிலத்தில் கூடமாட இருந்து வேலை செய்யாமல் எப்பொழுதும் கபாடியா பாபாவின் குடிலில், அவரோடு இருக்கவும், இல்லையெனில் கங்கைக் கரையில் கங்கை பிரதட்சிணம் செய்யும் சாதுக்களோடும் வெட்டிப்பேச்சு பேசியவாறு பொழுதைப் போக்குவதுமாக இருப்பதாக வசை பாடினார். சோம்பேறித்தனமாகக் கங்கைக் கரையில் அமர்ந்து பொழுதைக் கழிப்பதாகச் சாடும் ஏச்சையும், பேச்சையும் தாங்க முடியாது, ராம்சுரத் குன்வர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் வீடு இருந்த தஹியா சென்றார்.

தஹியா பீகாரில் மாநிலத்தில் இருந்தது, நர்தராவை விட தஹியா சற்று செழிப்பாக இருந்தது. ஊரில் பெரும் செல்வந்தரான ராம்ரஞ்ஜனி தேவியின் தந்தை, தனது மகளையும் மருமகனையும் மனமார வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அவரது பெரிய வீட்டில் ராம்சுரத் குன்வருக்கும் ராம்ரஞ்ஜனி தேவிக்கும் ஒரு பெரிய அறையை ஒதுக்கிக் கொடுத்தார். ராம்சுரத் குன்வர் அங்கிருந்தபடி அரசாங்க வேலைக்கு மனுச் செய்தார். அந்தக் காலகட்டத்தில் பீகார்வாசியாக இருப்பவருக்குத்தான் பீகாரில் அரசாங்க வேலை கொடுக்கப்படும் என்ற சட்டம் இருந்தது.

ராம்சுரத் குன்வர் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் பீகார்வாசியாக மாற அவருக்கென்று பீகாரில் சொத்துகள் இருக்க வேண்டும். ராம்சுரத் குன்வருக்கு பீகாரில் சொத்துகள் இல்லாததால் அவருக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை. எனினும், வேலைக்கான முயற்சியை அவர் கைவிடவில்லை. தனது மகள் ராம்ரஞ்ஜனி மூலமாக இந்த விஷயத்தை அறிந்த ஹுக்கும் நாரயண்ராய் தனது வீட்டின் எதிரில் இருந்த ஒரு சிறு வீட்டு மனையைத் தனது மருமகன் ராம்சுரத் குன்வர் பெயரில் வாங்கினார். அதில் சிறியதாக ஒரு வீட்டையும் எழுப்பினார். புதிய வீட்டில் ராம்சுரத் குன்வரும், ராம்ரஞ்ஜனி தேவியும் குடிபுகுந்தனர். இப்பொழுது ராம்சுரத் குன்வர் பீகார்வாசியாகி விட்டார்.

1943ம் ஆண்டு இஸ்லாம்பூர் எனும் ஊரில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அது தஹியாவிலிருந்து வெகு தூரம் இருந்தது, அந்த இடத்தின் சீதோஷ்ண நிலையும் அவருக்கு ஒத்துக் கொள்ளாமல் போய்விட்டது. சுமார் நான்கு மாதங்கள் அங்கு வேலை பார்த்துவிட்டு, உடல் நோய்வாய்ப்பட்டதால் அவர் நீண்ட விடுப்பில் தஹியா திரும்பினார். ஊர் மாற்றம் கேட்டு அவர் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். பரோனியில் உள்ள ராதாகிஷண் சமேரியா உயர்நிலைப் பள்ளிக்கு 1944ல் அவர் மாற்றப்பட்டார்.

ராம்சுரத் குன்வர் வேலைக்கு சென்று முதல் மாதச் சம்பளம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை தன்னை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய அண்ணன் மன்ரக்கன் குன்வருக்கு அனுப்பி வைத்தார். வருமையில் வாடிய மன்ரக்கன் குன்வருக்கு அந்தப் பணம் மிகவும் உபயோகமாயிருந்தது. சில மாதங்கள் வேலைபார்த்த பின்னர் ராம்சுரத் குன்வர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க விரும்பினார். அவர் அதுவரை வேலை பார்த்து வாங்கிய சம்பளப் பணத்தை அண்ணனுக்கு அனுப்பியது போக சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்திருந்தார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்து முடிக்க அந்தப் பணம் போதுமானதாக இருந்தது. மீண்டும் நீண்ட விடுப்பு எடுத்து, பாட்னாவில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தார்.

1945ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் கிரிடி எனும் ஊரில் உள்ள பசம்பா உயர்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு அமர்த்தி, தன் மனைவியை அழைத்து வந்து குடித்தனம் நடத்தினார். மீண்டும் சில மாதங்களிலேயே அவருக்கு பரோனி ராதாகிஷண் சமேரியா உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலாகியது. மனைவியை தஹியாவில் விட்டுவிட்டு, அவர் பரோனியில் ஒரு சிறு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். அப்போது அவர் மனைவி ராம்ரஞ்ஜனி தேவி தன் மூத்த மகளை கர்ப்பத்தில் சுமந்திருந்தார். 1945 நவம்பர் மாதம் 11ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆசை ஆசையாக மகளுக்கு ‘யசோதரா’ என்று ராம்சுரத் குன்வர் பெயர் சூட்டினார்.

கல்லூரியில் படிக்கும்போதும், ஆசிரியராக வேலை பார்க்கும்போதும், ராம்சுரத் குன்வர் பாடப்புத்தகங்களோடு மற்ற ஆன்மீகப் புத்தகங்களையும் விரும்பிப் படித்தார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அவர் ஏதேனும் ஞானியரின் உபதேசங்கள் அடங்கிய புத்தகங்களைப் படித்துக் கொண்டோ அல்லது தனிமையில் அமர்ந்து படித்த உபதேசங்களை ஆராய்ந்து கொண்டோ இருந்தார். அலகாபாத்திலும், பாட்னாவிலும் படிக்கும் பொழுது நாட்டில் சுதந்திரத்துக்காக பாடுபட்டுக்கொண்டிருந்த பெரும் தேசத் தலைவர்களான மஹாத்மா காந்தி, ஜவர்ஹர்லால்நேரு போன்றோர் பங்கு பெற்ற பெருங்கூட்டங்களுக்குச் சென்று, தலைவர்களின் உரையைக் கவனமோடு செவிமடுத்தார். நாட்டின் விடுதலை வேட்கை அவருள் பெருகியது. அச்சமயத்தில் வங்காளத்தில் அரவிந்தகோஷ் விடுதலை போராட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்று தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தது அவருக்கு பிரமிப்பைக் கொடுத்தது.

அவரும், அவரது நண்பர்களும் அரவிந்தர் நாட்டுக்குச் சேவை செய்வதை விடுத்து, தவ வாழ்வை மேற்கொண்டது குறித்து பலமுறை தர்க்கம் செய்தனர். தர்க்கம் மிகவும் தீவிரமாக இருக்கும். ஆத்மபலம் பெற தவவாழ்வை மேற்கொள்வதே சிறந்தது என்று ராம்சுரத் குன்வர் வாதிடுவார். நண்பர்களோ, தான் மட்டும் பகவத் சாட்சாத்காரத்தை அடைய வேண்டும் எனும் சுயநலத்துக்காக நாட்டுக்குப் பணி செய்வதை விடுத்து தவவாழ்வை மேற்கொள்வது தவறு என வாதிட்டனர். தவவாழ்வை எல்லோராலும் வாழமுடியாது. அதை வாழக்கூடிய சக்தி பெற்றோர் தவ வாழ்வை மேற்கொண்டால்தான் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடும் வீரர்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று கூறுவார் ராம்சுரத் குன்வர். யோகிகளின் தவத்தால் சுதந்திரப் போராட்டவீர்ர்கள் பெரும் சக்தியடைவார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றியும் பெறுவார்கள். வெறும் அறப்போராட்டத்தால் மட்டும் சுதந்திரம் பெற முடியாது. தவவலிமையும் சேர்ந்தால்தான் நாடு விடுதலை பெறும் என ராம்சுரத் குன்வர் அழுத்தமாக கூறுவார். நண்பர்களின் தர்க்கம் தொடர்ந்தபடி இருந்தது. ‘குடும்பத்தையும், நாட்டையும் காக்க நினையாது பகவானையே நினைத்திருந்தால் நன்மை ஏற்படுமா?’ ராம்சுரத் குன்வரின் நண்பர் ராம்சௌத்ரி கேட்டார்.

“பகவானில் கலந்திருந்தால், பகவான் நாட்டைப் பாதுகாத்துச் செழிப்பாக்குவார். எனவே, பகவானில் கலந்துவிட தவம் செய்யும் அரவிந்தர் தெய்வ காரியம் செய்கிறார்.” ராம்சுரத் குன்வர் பதிலளித்தார். “மனிதனின் லட்சியம் பகவானை அடைவதாக இருக்கவேண்டும். அந்த லட்சியப் பாதையில் ஒவ்வொருவரும் தைரியமாகச் செல்லும்போது வீடும், நாடும் தெய்வ சக்தியால் பாதுகாக்கப்படும். பகவானை அடைந்தவர்களின் செயல்கள் அனைத்தும் பூரணமாகவும், அறம் கொண்டதாகவும் மக்களுக்கு நலமளிப்பதாகவும் இருக்கும். எனவே, அனைவரது நோக்கமும் பகவானை அடைவதாகவே இருக்க வேண்டும்.” ராம்சுரத் குன்வரின் கருத்துகள் நண்பர்களை மிகவும் யோசிக்க வைத்தன.

1.8.1947ம் ஆண்டு ராம்சுரத் குன்வருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘அமிதாப்’ எனப் பெயர் சூட்டினார். 1948ம் ஆண்டுவரை ராம்சுரத் குன்வர் பரோனியில் ராதாகிஷண் சமேரியா உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறை காலங்களில் அவர் நர்தரா செல்வார். கபாடியா பாபாவின் தொடர்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது. நர்தரா செல்லும் சமயமெல்லாம் கபாடியா பாபாவின் குடிலில்தான் அதிக நேரத்தை ராம்சுரத் குன்வர் செலவழித்தார். கபாடியா பாபாவுடன் உரையாடுவதிலும், கங்கைக்கரையில் அமைதியாக அமர்ந்திருப்பதிலும் அவருக்கு ஆன்ம சுகம் கிடைத்தது. அவருக்குத் தனிமையில் இருப்பதைக் கற்றுக் கொடுத்தது கபாடியா பாபாதான், நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் நீர்கூட அருந்தாது, விரதம் காத்து மௌனம் மேற்கொள்ளுமாறு கபாடியா பாபா கூறினார். ராம்சுரத் குன்வர் நவராத்திரியின்போது தன் வீட்டில் உள்ள சிறு அறையில் அமர்ந்துகொள்வார். முழு விரதம் அனுஷ்டிப்பார். ஒன்பது நாட்களும் தனிமையில் பூரண மௌனமும் கடைபிடிப்பார். அவரது எண்ணமும், உணர்வும் பகவத் தியானத்திலேயே கழிந்தன. அவரை யாரும் தொந்தரவு செய்யாதபடி அவரது மனைவி ராம்ரஞ்ஜனி தேவி பார்த்துக் கொள்வார். 10ம் நாள் விரதம் முடித்து புறவாழ்வுக்கு ராம்சுரத் குன்வர் திரும்புவார்.

இந்த காலகட்டத்தில் ராம்சுரத் குன்வர் புத்தரின் வாழ்வும், உபதேசங்களும் அடங்கிய ‘லைட் ஆஃப் ஆசியா‘ (Light of Asia) என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் அவர் வாழ்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. அதேபோல் சுவாமி ராமதீர்த்தரின் ‘இன் வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன் (In Woods of God Realization)’ என்ற புத்தகத்தின் ஆறு தொகுப்பையும் படித்தார். துளசி ராமாயணம், பகவத் கீதை, மீராபாயின் பாடல்கள், கபீர்தாசின் பாடல்கள், ரவீந்திரநாத் தாகூரின் பாடல்கள், ஷேக்ஸ்பியர், மில்டன் ஆகியோரின் கவிதைகள் எனப் பல இலக்கிய, ஆன்மீக நூல்களை ஆவலோடு படித்தார். தன் மனைவியையும் சில புத்தகங்களைப் படிக்குமாறு கூறினார். பெண்மையின் பெருமையை விளக்கும் ‘கர் கி ராணி’ (இல்லத்தரசி), ‘ஆனந்த நிகேதன்’ (ஆனந்த இல்லம்) ஆகிய ஹிந்திப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து தன் மனைவியைப் படிக்கக் கூறினார்.

ராம்சுரத் குன்வர் எந்த ஊரில் இருந்தாலும், தனிமையை மிகவும் விரும்பினார். அளவான பேச்சு, கம்பீரம், பிறரை எந்த வகையிலும் சிரமப்படுத்தாத காருண்யம், அனைவருக்கும் மரியாதை அளிக்கும் பெருந்தன்மை, கஷ்டப்படும் எவருக்கும் தன்னால் இயன்றவரை உதவிகள் செய்யும் பரோபகாரம் என மொத்தத்தில் ராம்சுரத் குன்வர் இல்லற வாழ்க்கை வாழ்ந்தாலும், தன்னலம் பேணாமல் தர்மத்தை கடைபிடிக்கும், ஆண்டவனையே எப்பொழுதும் தியானிக்கும் ஒரு சாதுவைப் போலவே வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நல்ல மகனாக இருந்தார், நல்ல சகோதரனாகத் திகழ்ந்தார், நல்ல கணவனாக வாழ்ந்தார், நல்ல தந்தையாகவும் இருந்தார். எனவேதான், அவர் நல்ல சீடனாகவும் இருந்து, நல்ல சாதகனாகவும் பரிணமித்தார். முடிவில் உன்னத யோகியாக ஆண்டவனின் செல்லப் பிள்ளையாக பரிணாம வளர்ச்சியின் உச்சிக்கு சென்றார். ஒரு குடியானவரின் பிள்ளை தெய்வப் பிள்ளையாக மாறிய கதை எத்தனை உள்ளங்களை மாற்றப் போகிறதோ?

விவரம் அறிந்த பிராயம் முதல் ராம்சுரத் குன்வரிடம் ஏதோ ஒரு தேடுதல் எப்பொழுதும் இருந்தது. தன் தாயிடம் ராமனின் கதையும், கிருஷ்ணனின் கதையும், ஹனுமனின் கதையையும் கேட்ட, அந்த இளம் பிள்ளைக்குத் தேடுதல் இன்னும் அதிகரித்தது. கங்கையைப் பிரதட்சிணம் செய்யும் சாதுக்களின் அனுபவமும், கபாடியா பாபாவுடன் கிடைத்த சத்சங்கமும் அந்தத் தேடுதலைப் புதுப்பித்தது. சிருஷ்டி ரகசியம் தெரிந்தும் தெரியாமலும் கண்ணாம்பூச்சி ஆடின. அன்பிலும், சேவையிலும், தியாகத்திலும் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க அவர் பெரும் முயற்சி செய்தார். இந்த மானுட வாழ்வில் தனது பங்கு என்ன என்ற கேள்வி அவரை விடாது தொடர்ந்தது. காசியில் விஸ்வநாதர் சன்னிதியில் ஏதோ தோன்றியது. அது ஒரு சிறிய ஜோதியாகப் புலப்பட்டது. தனது வாழ்வின் நோக்கத்தை அது சுட்டிக் காட்டியதாகப் பின்பு வெகுகாலம் கழித்தே அவர் புரிந்துகொண்டார்.

சாதுக்களின் அரவணைப்பும், கபாடியா பாபாவின் பேரருளும் தனது வாழ்வுக்கு ஒரு புதுவிதமான அர்த்தத்தைக் கொடுக்கப்போகிறது என நினைத்தார். துளசி ராமாயணமும், பகவத்கீதையும், ராமதீர்த்தர், ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் உபதேசங்களும், புராண இதிகாசங்களும் அவரது சிந்தனையை வளமாக்கின. அனைத்திலும் ஒரு அடிப்படை உண்மை இருப்பதை அவர் கண்டுகொண்டார். அந்த உண்மைதான் ‘குரு’. தான் தேடுவதும் குருவைத்தான் என்பதை உணர்ந்தார். குருவின் அருளில்லாது தெய்வ சாட்சாத்காரம் சாத்தியமில்லை. கபாடியா பாபாதான் தன் குரு என முதலில் ராம்சுரத் குன்வர் நினைத்தார். கபாடியா பாபாதான் தனது குருவெனில் அவர் ஏன் தனக்குத் தீட்சை அளிக்கவில்லை என்ற கேள்வி அவருள் எழுந்தது.

அன்பான மனைவி, அருமையான குழந்தைகள், வளமான வருமானம், சமுதாயத்தில் பெருமையும், அந்தஸ்தும் இருந்தும் தன் குறிக்கோளான குரு கடாட்சத்துக்காக ஏங்கினார். தன் வாழ்வையே அதற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். 1947ம் வருடம் கபாடியா பாபாவின் திருப்பாதங்களில் சரணடைய ராம்சுரத் குன்வர் நர்தரா விரைந்தார். தான் குருவென நினைத்திருந்த கபாடியா பாபாவின் திருவடி பணிந்து நின்றார். தனக்கு மந்திர தீட்சை அருளி தன்னைச் சிஷ்யனாக அங்கீகரிக்க வேண்டினார்.

கபாடியா பாபா சிரித்தபடி “உன் குரு தெற்கே இருக்கிறார்” என்று கூற ராம்சுரத் குன்வர் திகைத்துப் போனார். ‘உன் குருவைத் தெற்கே தேடிக் கண்டுபிடி. குருவின் அருளின்றி பகவத் சாட்சாத்காரம் கிடையாது” என கபாடியா பாபா ராம்சுரத் குன்வருக்குத் தெளிவுபடுத்தினார். கபாடியா பாபா ராம்சுரத் குன்வரின் தலையாய பணி தெற்கில் திருவண்ணாமலையில் இருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்திருந்தார். மஹரிஷி ரமணரைப் பற்றியும், அவரது உபதேசங்களைப் பற்றியும் கபாடியா பாபா ராம்சுரத் குன்வரிடம் விவரமாகக் கூறியிருக்க வேண்டும். மஹரிஷி ரமணரின் ஸ்தலமான திருவண்ணாமலை ஷேத்திரத்தைப் பற்றியும் கபாடியா பாபா அவரிடம் கூறியிருக்க வேண்டும். திருவண்ணாமலை சென்று ரமண மஹரிஷியைத் தரிசிக்க ராம்சுரத் குன்வர் ஆவல் கொண்டார். பக்கத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தர் இருப்பதும் அவருக்கு ஏற்கெனவே தெரியும். ரமணமஹரிஷியோடு, ஸ்ரீ அரவிந்தரையும் பாண்டிச்சேரியில் தரிசனம் செய்யலாம் என்ற எண்ணத்தில், 1947ம் ஆண்டு முதன் முதலாக ராம்சுரத் குன்வர் தெற்கே பயணம் மேற்கொண்டார். சென்னை மாநகரம் வந்து, அங்கிருந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். அருணாச்சல மலை தன் முழுத் தோற்றத்தையும் காலைக் கதிரவன் ஒளியில் ஜொலித்தபடி அவருக்குத் தரிசனம் தந்தது. மலை தரிசனம் ராம்சுரத் குன்வருக்கு மன அமைதி தந்தது. ரமண மஹரிஷி ஆசிரமம் செல்லும் வழியைக் கேட்டறிந்து வேகமாக நடந்தார். ஆசிரமம் சென்றடைந்தார். ரமண மஹரிஷி பழைய தரிசன அறையில் பக்தர்களோடு அமர்ந்திருந்தார்.

தனது துணிமணிகள் இருந்த பையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, ராம்சுரத் குன்வர் தரிசன அறைக்குள் நுழைந்தார். அறையில் மங்கலான வெளிச்சம் பரவியிருந்தது. அங்கு மூலையில் ஒரு திண்ணையில் ரமண மஹரிஷி சாய்ந்து அமர்ந்திருந்தார். கௌபீனம் மட்டும் அணிந்திருந்த அந்த மஹான் பார்வையின் தீட்சண்யம் அவரது தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த ராம்சுரத் குன்வர் மஹரிஷி முன்சென்று சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். “ஐயனே, உன் திருவடியே சரணம் என்று வந்துள்ளேன், எம்மை ஆட்கொண்டருள்வாய் சுவாமி. மௌனமாக ராம்சுரத் குன்வர் பிரார்த்தித்தார். மென்மையான புன்னகையால் ராம்சுரத் குன்வரின் மௌனமான பிரார்த்தனையை ரமண மஹரிஷி செவி மடுத்தார். அவரது அருட்கடாட்சம் ராம்சுரத் குன்வரின் மீது படர்ந்தது.

மஹரிஷி முன்னே ராம்சுரத் குன்வர் அமர்ந்து கொண்டார். அறை முழுவதும் தெய்வீகம் பரவியிருந்தது. பரப்பிரம்ம சொரூபமாக இருந்த மஹரிஷியிடமிருந்து பேரானந்தமும், ஆழ்ந்த அமைதியும் பிரவாகமாகப் பாய்ந்து வந்து அனைவரையும் மூழ்கடித்தது. மஹரிஷியின் கண்கள் தன்னை நோக்கியே அருள்பாலிப்பதை ராம்சுரத் குன்வர் உணர்ந்தார். அவரது கண்கள் அவரறியாமலே மூடிக்கொண்டன. மஹரிஷியின் பார்வை அவரை உள்முகமாக அழைத்துச்சென்றது. சற்று நேரத்தில் ராம்சுரத் குன்வர் மறைந்துவிட்டார். அவரது உடல் அங்கே கிடந்தது. உடலில் உள்ள உணர்வுகள், புத்தி, மனம் அத்தனையும் பறிக்கப்பட்டுவிட்டதைப்போல் உணர்ந்தார். தான் விடுதலை அடைந்து அண்டப் பெருவெளியில் அந்த மஹாசக்தியுடன் இரண்டறக் கலந்துவிட்டதைப் போல் உணர்ந்தார். இதுதான் ஆழ்நிலை தியானமோ? அந்த தியானம் மஹரிஷி முன்னால் எந்த முயற்சியும் எடுக்காமல் இயல்பாகவே ராம்சுரத் குன்வருக்குக் கைகூடியது.

வெகு நேரம் கழித்து கண் திறந்து பார்த்த ராம்சுரத் குன்வர் மஹரிஷி தன்னையே பெருங்கருணையோடு பார்ப்பதை அறிந்தார். அவர் மெய் சிலிர்த்தது. மஹரிஷி மௌனமாக மென்மையாக ராம்சுரத் குன்வர் மட்டும் அறியுமாறு புன்னகை புரிந்தார். ராம்சுரத் குன்வர் கண்ணீர் மல்க கைகூப்பி, தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தபடியே மஹரிஷியை நமஸ்கரித்தார். மஹரிஷி ராம்சுரத் குன்வரை அங்கீகரித்து அருள்பாலித்தார். முதல் சந்திப்பிலேயே மஹரிஷியின் பேரருளை ராம்சுரத் குன்வர் பெற்றார்.

தரிசன நேரம் முடிந்தது. ஆசிரமத்திலேயே அவருக்கு ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டது. சில நாட்கள் ஆசிரமத்திலேயே கழித்தார். மஹரிஷியை தரிசனம் செய்ய முடியாத நேரங்களில் ராம்சுரத் குன்வர் மலையில் சஞ்சாரம் செய்தார். ரமண மஹரிஷி தவம் செய்த விருப்பாக்ஷி குகை, ஸ்கந்தாஸ்ரமம் என எல்லா இடங்களையும் தரிசனம் செய்தார். அண்ணாமலையார் திருக்கோவிலுக்கும் விஜயம் செய்தார். மஹரிஷி வெகுகாலம் தவம் இருந்த பாதாள லிங்கத்தருகே ராம்சுரத் குன்வர் வெகுநேரம் அமர்ந்திருந்தார். கோவிலின் மற்ற சன்னிதிகளுக்கும் அவர் சென்று மனமுருக குரு கடாட்சம் கிடைப்பதற்காக வேண்டினார். கோவிலின் பிரமாண்டம் அவரை வெகுவாக கவர்ந்தது. பிற்காலத்தில் அந்தப் பிரமாண்டமான அண்ணாமலையார் திருக்கோயில்தான் அவரது உண்மையான வீடாகப்போகிறது என்பதை அவர் அன்று அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை.

“இந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்தான் இந்தப் பிச்சைக்காரன் போன்றோருக்கு உண்மையான வீடு” என்று பிற்காலத்தில் யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி கூறுவார்.

ரமணாஸ்ரமத்தில் தங்கியிருக்கும்போது மஹரிஷியின் உபதேசங்களைக் கற்று அறிந்தார். மஹரிஷியின் ‘நான் யார்?‘ எனும் கேள்வி ராம்சுரத் குன்வரிடம் எழுந்தபோது அவரது சரீரம், புத்தி, மனம், உணர்வுகள் அவரிடமிருந்து விலகி இயல்பான சமாதி நிலை அடைந்தார். ‘நான் யார்?‘ என்ற கேள்விக்கு விடைதேட முயன்ற தனக்கு வெகு சுலபமாக சமாதி நிலை கிட்டியதை உணர்ந்து ராம்சுரத் குன்வர் பிரமித்துப் போனார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராம்சுரத் குன்வர் ரமண மஹரிஷியின் முன்னே அமைதியாக அமர்ந்து மஹரிஷியின் பேரருளைப் பருகினார்.

ஊர் திரும்பும் நாள் வந்தது. மஹரிஷியைத் தரிசித்தார். அவர் உள்ளத்தில் ஒரு பிரார்த்தனை தோன்றியது, “ஹே பகவானே தமது திருவடியைச் சரணமடைய தமது அருளைப் பொழிவாயாக. தமது திருவடிகளில் அடியேனை என்றென்றும் இருத்திக் கொள்வாயாக.“ “சரி” என்று மஹரிஷி திருவாய் மலர ராம்சுரத் குன்வர் மெய் சிலிர்த்தது. தமிழ் மொழி அறியாத ராம்சுரத் குன்வரின் மனதில் அந்தச் சொல் மட்டும் ஆழப்பதிந்தது. அதன் அர்த்தமும் புரிந்தது. அவர் கற்ற முதல் தமிழ்ச் சொல் ‘சரி’ எனும் சொல்தான். அச்சொல்லை, ரமண மஹரிஷியிடமிருந்து கற்றதை அவர் பிற்காலத்தில் பலமுறை பெருமிதத்தோடு சொன்னார்.

மஹரிஷியின் திருவடிகளைப் பணிந்து நமஸ்கரித்துவிட்டு ‘அருணாசல’ மந்திரத்தை ஜெபித்தபடி கிரி பிரதட்சிணமும் செய்துவிட்டு பாண்டிச்சேரி சென்றார். அருணாச்சல மலையும் ரமண மஹரிஷியும் அவரோடு ஒன்றிப் போய்விட்டார்கள். பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய முயன்றபோது அவர் மௌனவிரதத்தில் தனித்திருப்பதாகவும், தரிசனம் செய்ய இயலாதென்றும் அறிந்து ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு சென்னை வழியாக ஊர் திரும்பினார்.

ஊர் திரும்பிய ராம்சுரத் குன்வர், தனக்குப் பதவி உயர்வு கிடைத்திருப்பதை அறிந்துகொண்டார். பரோனி ராதாகிஷண் சமேரியா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்த அவர் நாரைப்பூர் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக மாற்றப்பட்டார். உடனடியாக நாரைப்பூர் சென்று தலைமையாசிரியராக பொறுப்பேற்றுகொண்டார். அந்த அரசாங்க உயர்நிலைப் பள்ளியின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதை நிர்வகிக்கும் சில அரசு நிர்வாகிகள் பள்ளியை மேம்படுத்தாமல் சோம்பியிருந்தனர்.

தலைமையாசிரியராக பொறுப்பேற்ற ராம்சுரத் குன்வர் நிர்வாகிகளிடம் முறையாக பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் பள்ளியைச் சீர்செய்யாததால் அரசாங்கத்துக்குத் தகவல் வெரிவித்துப் பள்ளியை அவர் மூடிவிட்டார். இதனால் நிர்வாகிகள் பள்ளியைச் சீர்செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். ராம்சுரத் குன்வரின் மீதும் தணியாத கோபம் கொண்டனர். சில மாதங்களில் ராம்சுரத் குன்வர் மீண்டும் மாற்றப்பட்டார். இம்முறை நவல்கட் உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். நவல்கட் ஒரு சிறிய ஊர். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தார்.

திருவண்ணாமலை சென்று வந்த நினைவுகள் அவர் மனத்தில் மீண்டும் மீண்டும் தோன்றிட அருணாச்சல மலையின் அழகும் ரமண மஹரிஷி தன் மீது பொழிந்த பேரருளையும் சதாசர்வ காலமும் அவர் நினைத்துக்கொண்டு இருந்தார். மஹரிஷியின் ‘நான் யார்?’ என்ற ஆத்ம விசாரத்தை அவர் தொடர்ந்து ஆத்ம சாதனையாக செய்து வந்தார். தலைமையாசிரியர் பணிச்சுமை அவரது நேரத்தை மிகவும் எடுத்துக்கொண்டதால் தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அரசு அவரை துணைத் தலைமையாசிரியராக நியமித்தது, பணிச்சுமையும் சற்றுக் குறைந்தது.

தெய்வீகப் பேரருளைப் பெறுவதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள ராம்சுரத் குன்வர் பெரும் முயற்சி மேற்கொண்டார். ரமண மஹரிஷியின் தூய அருளைப் பெறுவதற்கு அவர் கடுமையான தவவாழ்வை மேற்கொண்டார். தனது உணவுப் பழக்கத்தை மாற்றினார். காய்ச்சாத பசும்பாலும், பழங்களும் மட்டுமே அவரது ஆகாரமாயின. மேனி மெலிய ஆரம்பித்தது. ராம்ரஞ்ஜனி தேவி பெரும்பாடுபட்டு வற்புறுத்தியும் சமைத்த உணவுகளை சாப்பிட மறுத்தார். முடிவில் சுரைக்காயைப் பாலில் கலந்து சிறிது சர்க்கரையும் சேர்த்து அருந்துமாறு வேண்டிக் கேட்டுக்கொண்டார். ராம்சுரத் குன்வர் மனமிறங்கி மனைவியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். உப்பு, காரம் நிறைந்த உணவுப் பொருட்களை ராம்சுரத் குன்வர் அறவே ஒதுக்கினார். இப்படிப்பட்ட கடுமையான உணவுக் கட்டுப்பாட்டின் காரணத்தை நண்பர்கள் கேட்டபோது, பகவான் வாழும் இல்லமாக தன்னுடலை மாற்ற முயற்சிப்பதாகச் சொன்னார்.

பள்ளியின் வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் ரமணரின் உபதேச நூல்கள், ஸ்ரீ அரவிந்தரின் உபதேசங்கள், பகவத்கீதை, ஆதிசங்கரரின் அருள் கொடைகள் மற்றும் பல்வேறு ஞானிகளின் உபதேச சாரங்களைக் கற்று அறிந்தார். புராண இதிகாசங்களையும் கவனத்தோடு படித்தறிந்தார். ஆழ்நிலை தியானமும் அவருக்கு இயல்பாகவே கைகூடியது. பல்வேறு மத நூல்களையும் உலகில் வாழ்ந்த தலைசிறந்த வேதாந்திகளின் கருத்தாய்வும், தத்துவ ஞானிகளின் பகுத்தறிந்த, பண்பட்ட பெரும் ஞானத்தையும் அவரால் சுலபமாக புரிந்துகொள்ள முடிந்தது. இதனிடையே ஆங்கில இலக்கியநூல்கள், ஹிந்தி, சமஸ்கிருத தத்துவார்த்த நூல்கள், சிறந்த பிறமொழி ஆசிரியர்களின் கருத்தோட்டங்கள் என எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். அன்றைய உலகின் அரசியல் நடப்பும் அவர் கவனத்தில் இருந்து தப்பவில்லை. அவர் ஒரு மகத்தான ஆசிரியராக இருந்தும்கூட தினமும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளத் தவறவில்லை.

இல்லற வாழ்க்கையும் இனிதே சென்றது. கோவிலுக்கு அழைத்துச் செல்லுமாறு ராம்ரஞ்ஜனி தேவி கணவரிடம் வேண்டுவார். கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டுமென கணவர் கேட்பார். தெய்வத்தைத் தரிசனம் செய்ய என மனைவி சொல்லும்போது, ராம்சுரத் குன்வர் “தெய்வத்தைத்தானே காணவேண்டும், இதோ என்னைப் பார், என்னில் உன் இறைவனைப் பார்.” என உத்வேகத்துடன் சொல்வதை, கணவர் கேலி செய்கிறார் என்று எண்ணி ராம்ரஞ்ஜனி தேவி சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். பிறகு, குடும்பமே கோவிலுக்குச் செல்லும். குழந்தைகளை ராம்சுரத் குன்வர் கவனித்துக்கொள்வார். ராம்ரஞ்ஜனி தேவி சாவகாசமாக தெய்வ தரிசனம் செய்து வருவார். இவற்றையெல்லாம் ஸ்ரீ ராம்ரஞ்ஜனி தேவி என்னிடம் தனது 81 வயதில் அனுபவித்துக் கூறியபோது அவர் முகத்தில் காணப்பட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு என் உள்ளத்தில் ஏதோ ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

ராம்சுரத் குன்வர் தன் குழந்தைகளை மிகவும் நேசித்தார். பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவரது மழலைச் செல்வங்கள் ‘அப்பா’ என்று அருமையாக அழைத்து அவர்மீது பாய்ந்து தாவி விளையாடும்போது தாய் “அப்பாவின் வெண்மையான உடைகளை அழுக்காக்கிப் பாழாக்காதீர்கள்” எனச் சொல்வார். உடனே தந்தை “இந்தக் குழந்தைகள் என் ராமன், என் கிருஷ்ணன், இவர்கள் என்னை எப்படி அழுக்கடையச் செய்ய முடியும்?” என வினவுவார். குழந்தைகளை வாரியணைத்து அவர்களோடு விளையாடுவார். குழந்தைகளுக்கு முதன்முதலில் அவர் அட்சர அப்பியாசம் செய்ததே ‘ராமா’ எனும் மந்திரச் சொல்லால்தான். குழந்தைகளிடம் என்றுமே ராம்சுரத் குன்வர் மிகுந்த மரியாதையோடுதான் பேசுவார். இவற்றையெல்லாம் ராம்ரஞ்ஜனி தேவி சொல்லச் சொல்ல மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். எத்தனையோ குடும்ப விஷயங்களை ஸ்ரீ ராம்ரஞ்ஜனி தேவி ராஞ்சியில் அவர் வீட்டில் இரவு முழுவதும் சொன்னதைக் கேட்ட எனக்கு ராம்சுரத் குன்வர் எப்பேர்பட்ட அற்புதமான கணவர், எவ்வளவு மேன்மையான மனிதர், எவ்வளவு அன்பான தந்தை, எவ்வளவு உன்னதமான ஆசிரியர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

மூன்று சின்னஞ்சிறு குழந்தைகளையும், வயிற்றில் சுமந்திருந்த நிறை மாத சிசுவையும், தன்னையும் நிர்கதியாக திக்கற்று தவிக்கவிட்டு சென்றவர் என்ற ஆதங்கமே இல்லாமல் கணவரது கல்யாண குணத்தைக் கொண்டாடி நினைவுகூர்ந்த ராம்ரஞ்ஜனி தேவியும், யோகி ராம்சுரத்குமாரும் எனக்கு சீதா ராமனாகவே தெரிந்தனர். சீதையும் நிறைசூலியாக கானகத்தில் தனித்து விடப்பட்டார். ராம்ரஞ்ஜனி தேவியும் மூன்று குழந்தைகளுடன் நிறைமாத கர்ப்பிணியாக 1952ம் ஆண்டு வாழ்வெனும் கானகத்தில் தனித்து விடப்பட்டார்.

சீதையை ராமன் ஊரார் பழிச்சொற்களால் கானகத்துக்கு அனுப்பினார். ஆனால் இங்கோ ராம்சுரத் குன்வர் தெய்வ காரியமாற்றுவதற்காக தெய்வத்தாலே இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்பட்டார். பின்னர் ராம்சுரத் குன்வர், யோகி ராம்சுரத்குமார் ஆனார். தானே தெய்வமாகி அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்பாலித்தார். பரிணாம வளர்ச்சியைத் துரிதப்படுத்த வந்த மஹானான யோகி ராம்சுரத்குமாரின் உண்மை சொரூபத்தை அறிந்த அவரது துணைவியார், வாழ்வில் தனிமையாக நான்கு குழந்தைகளுடன் சிரமப்பட்டாலும் தனது கணவனை அல்லும் பகலும் விடாது துதிபாடி நினைவில் இறுத்திக் கொண்டதன் மூலம் அவரும் தெய்வாம்சம் பொருந்தியவர்தான் என்று அனைவரும் திண்ணமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1949ம் ஆண்டு கோடை விடுமுறையில் ராம்சுரத் குன்வர் தன் குடும்பத்தை தஹியாவில் விட்டு விட்டு தெற்கே பயணமானார். இம்முறை முதலில் அவர் ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய பாண்டிச்சேரி சென்றார், ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மீக நூல்களின் தாக்கத்தால் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசனம் செய்யும் எண்ணம் மேலோங்கியது. எனவே, முதலில் பாண்டிச்சேரி சென்று பின்னர் திருவண்ணாமலை செல்ல முடிவு செய்தார். நாடு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. சுதந்திர தினச் செய்தியாக ஸ்ரீ அரவிந்தர் வெளியிட்ட கட்டுரை ராம்சுரத் குன்வரை மிகவும் கவர்ந்தது. நாடு சுதந்திரம் பெற்ற தினம்தான், ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம் என்று அறிந்து ராம்சுரத் குன்வர் வியந்து போனார். ஸ்ரீ அரவிந்தரின் தரிசனம் சற்றுத் தொலைவிலிருந்து ராம்சுரத் குன்வருக்கு கிட்டியது. ஸ்ரீ அரவிந்தரின் அருள் கடாட்சம் அவர்மீது படர்ந்ததை அவரால் உணரமுடிந்தது. அவரது மேனி சிலிர்த்தது. ஸ்ரீ அரவிந்தரைக் கைகூப்பி தொலைவிலிருந்தே தொழுதார். ஆசிரமத்தில் சில நாட்கள் தங்க அவர் உத்தேசித்திருந்தார். எனினும் சில பல காரணங்களால், ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் அவரால் தங்க முடியவில்லை.

பாண்டிச்சேரியிலிருந்து ராம்சுரத் குன்வர் திருவண்ணாமலை புறப்பட்டார். புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் அருணாச்சல மலை சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றார். அண்ணாமலை அவரை வா வா என வரவேற்பதுபோல் தோன்றியது. அந்தச் சிவசொரூபமான அண்ணாமலைக்கு மானசீக நமஸ்காரம் செய்தார். அங்கிருந்து வேகமாக ரமணாஸ்ரமம் நோக்கி நடந்தார். ரமண மஹரிஷியைத் தரிசிக்க மனம் துடித்தது. ஆசிரமம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஆசிரமத்தில் வேதனை மிகுந்த இனம் புரியாத அமைதி நிலவுவது போல் தோன்றியது. மகரிஷி நோய் வாய்ப்பட்டுள்ளார் எனக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். வைத்தியர்கள் மஹரிஷியின் சரீரம் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். எனவே, ரமண மஹரிஷி ஓய்வெடுக்கும் பொருட்டு தரிசன நேரம் குறைக்கப்பட்டது. காலையில் சிறிது நேரமும் மாலையில் சிறிது நேரமும் ரமண மஹரிஷி பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தார். மஹரிஷியின் தேஜஸ், நோயால் எந்தவிதத்திலும் குறையவில்லை. மாறாக, அவரது தேஜஸ் கூடியிருந்தது. மஹரிஷியின் முகப்பொலிவும் அவரது கருணைமிக்க நயனங்களும் பக்தர்களுக்கு அருள்மழை பொழிந்து கொண்டிருந்தன.

ராம்சுரத் குன்வர் மஹரிஷியைத் தரிசித்து, நமஸ்காரம் செய்யும்போது, மஹரிஷி தெய்வீகப் புன்னகை பூத்தார். மஹரிஷி எப்பொழுது ராம்சுரத் குன்வரைப் பார்த்தாலும் அவர் விழிகள் மலர்ந்து தெய்வீகப் புன்னகை செய்வது வழக்கம். ரமண மஹரிஷி தன்னை வரவேற்று புன்னகை செய்ததைப் பார்த்த ராம்சுரத் குன்வரின் தேகம், மனம், புத்தி மற்றும் உணர்வுகள் அனைத்தும் சிதறி மறைந்தன. அங்கே தெய்வீகம் கமழ்ந்தது. பேரமைதி படர்ந்தது. மஹரிஷி தனது பேரருளை ராம்சுரத் குன்வரின் மேல் பொழிந்தார். ராம்சுரத் குன்வர் மேனி சிலிர்த்தது அமைதியாக நின்றார். அவர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. ராம்சுரத் குன்வர், மஹரிஷியைக் கண்டவுடன் தன்னை இழந்து விடுவதனால் அவரால் பேச முடியாமல் போனது. தன்னையே இழந்தவர் யாருடன் என்ன பேசமுடியும்? தரிசன நேரம் முடிந்தது. ராம்சுரத் குன்வர் அவ்விடமிருந்து சென்றார்.

ரமண மஹரிஷியின் நோயின் தீவிரம் அதிகமானது. பக்தர்களின் தரிசன நேரம் மேலும் குறைக்கப்பட்டது. மஹரிஷியின் அருகில் செல்லவும் முடியவில்லை. தூரத்தில் இருந்துதான் தரிசிக்க முடிந்தது. ராம்சுரத் குன்வர் மிகுந்த வேதனை அடைந்தார். பகலெல்லாம் அருணாச்சல மலையில் சஞ்சாரம், அங்கு பல சாதுக்களையும், குகையில் வாழும் பல சாதகர்களையும் சந்தித்தார். அங்குள்ள ஆலமரத்தடிக் குகையில் வாழ்ந்து வந்த சாது ஒருவர் கேரள காஞ்சன்காட்டில் வாழ்ந்து வரும் சுவாமி ராமதாசரைப் பற்றி மிகவும் பக்திபூர்வமாக சிலாகித்துச் சொன்னார். சுவாமி ராமதாசரும் ரமணமஹரிஷியைத் தரிசனம் செய்து பகவத் சாட்சாத்காரம் அடைந்தவர் என்று அறிந்ததும் சுவாமி ராமதாசரைத் தரிசிக்கும் ஆவல் ராம்சுரத் குன்வருக்கு ஏற்பட்டது.

அடுத்த நாளே, அவர் காஞ்சன்காட்டுக்குப் பயணம் செய்தார். ‘பப்பா‘ என பக்திப்பூர்வமாக பக்தர்களால் அழைக்கப்படும் சுவாமி ராமதாசரின் ‘ஆனந்தாஸ்ரமம்‘ சென்றடைந்தார். சுவாமி சச்சிதானந்தர் பப்பா ராமதாசரின் நேரடிசீடர் அவர் ராம்சுரத் குன்வரை வரவேற்றார். ராம்சுரத் குன்வர் தங்குவதற்கு அறை ஒதுக்கிக் கொடுத்தார். சிறிதுநேர ஓய்வுக்குப் பின்னர் ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசரை பஜனை மண்டபத்தில் தரிசனம் செய்தார். பப்பா ராமதாசர் அங்கு இருந்த ஒரு வசதியான சோபாவில் வீற்றிருந்தார். அவரைச் சுற்றி பக்தர்கள் அமர்ந்துகொண்டு “ஓம்ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்” எனும் மந்திரத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். ராம உச்சாடனம் செய்து கொண்டிருந்த பக்தர்களோடு ராம்சுரத் குன்வரும் அமர்ந்து கொண்டார். பப்பா ராமதாசரையே அவர் உற்று நோக்கினார். பப்பா ராமதாசர் பரமானந்தமாகச் சிரித்தபடியே இருந்தார். பப்பாவின் ஆனந்தம் அங்கிருந்த அனைத்து பக்தர்களையும் பற்றிக் கொண்டு அவர்களை மகிழ வைத்தது. அப்பொழுது பக்கத்து அறையிலிருந்து மாதாஜி ஸ்ரீ கிருஷ்ணாபாய் திடீரென வெளிப்பட்டார். பப்பா ராமதாசரை நமஸ்கரித்துவிட்டு அவரிடம் ஏதோ சொன்னார். பப்பா ராமதாசர் அதைக்கேட்டு வெகுநேரம், மிக்க ஆனந்தத்துடன் சத்தமாகச் சிரித்துக் கொண்டே இருந்தார். மாதாஜி, பப்பா பக்தர்கள் அனைவரும் கொங்கணி, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலேயே பேசினர். ராம்சுரத் குன்வருக்கு அங்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு எல்லாமே விசித்திரமாகப் பட்டது. இதுவரையில் அவர் பேரமைதியும், தீவிர நோக்கும் கொண்ட சாதுக்களையும், ஞானிகளையுமே பார்த்துவந்துள்ளார். பப்பா ராமதாசரைப்போல் அட்டகாசமாகச் சிரித்துப்பேசி மகிழும் ஒரு ஞானியை அவர் கண்டதே இல்லை. எனவே, அவருக்கு எல்லாமே வித்தியாசமாகப் பட்டது. பப்பா ராமதாசர் பளிச்சென்ற வெண்மையான ஆடை அணிந்து சரளமாக அனைத்து பக்தர்களிடமும் சிரித்துப் பேசி, ஆனந்தித்தது அவருக்கு விந்தையாகப் பட்டது. பப்பா ராமதாசர் வித்தியாசமானவர் என்று ராம்சுரத் குன்வர் எண்ணினார். ஏனோ அவருக்கு பப்பா ராமதாசர் மீது பற்று ஏற்படவில்லை. ராஜவாழ்க்கை வாழும் ஒரு சாதாரண சாதுவாகவே பப்பா ராமதாசரை அவர் நினைத்தார்.

சற்றுநேரத்தில் சுவாமி சச்சிதானந்தர் அங்கே வந்தார். ராம்சுரத் குன்வரை பப்பா ராமதாசருக்கும், மாதாஜி கிருஷ்ணாபாய்க்கும் அறிமுகம் செய்து வைத்தார். ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசாரை நமஸ்கரித்தார். பப்பா ராமதாசர், ராம்சுரத் குன்வரின் பெயருக்கு அர்த்தம் கேட்டார். “ராமனிடம் தீவிர அன்பு கொண்டவன்” என்று ராம்சுரத் குன்வர் தன் பெயருக்கு அர்த்தம் சொன்னார். ராம்சுரத் குன்வரின் ஊர், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றையும் பப்பா ராமதாசர் கேட்டு அறிந்தார். இறுதியில் பப்பா ராமதாசர், ராம்சுரத் குன்வரிடம் ‘எத்தனை நாள் தங்கப்போகிறார்’ எனக் கேட்க ராம்சுரத் குன்வர் ‘மூன்று நாட்கள் தங்கப் போவதாகச்’ சொன்னார். சிறிது நேரத்தில் பப்பா ராமதாசர் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

ராம்சுரத் குன்வர் ஆசிரம வளாகத்தில் சுற்றித் திரிந்தார். ஆசிரம அலுவலகத்தில் பப்பா ராமதாசரின் சில புத்தகங்களை வாங்கினார். அவற்றில் இன் க்வெஸ்ட் ஆஃப் காட் ( In Quest of God) இன் த விஷன் ஆஃப் காட் (In the Vision of God) என இரு புத்தகங்களும் அடக்கம். ராம்சுரத் குன்வர் மூன்று நாட்கள் ஆனந்தாஸ்ரமத்தில் தங்கினார். தினமும் பப்பா ராமதாசரை தரிசனம் செய்தார். எனினும், அவர் மனத்தில் பப்பா ராமதாசர் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மூன்றாவது நாள் முடிவில் பப்பா ராமதாசர், மாதாஜி கிருஷ்ணாபாய் மற்றும் சச்சிதானந்த சுவாமியிடம் விடைபெற்றுக்கொண்டு திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். அங்கே ரமணாஸ்ரமத்தில் தங்கினார். ரமண மஹரிஷியைத் தரிசித்தார். நோயின் தாக்கத்தில் ரமண மஹரிஷி இருந்தாலும் ராம்சுரத் குன்வரைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு தெய்வீகப் புன்னகை மலர்ந்ததைக் கண்ட ராம்சுரத் குன்வர் மெய்மறந்து உருகி நின்றார். சில நாட்கள் கடந்தன. ஊர் திரும்பும் நாள் வந்தது. ரமண மஹரிஷியைத் தூரத்தில் இருந்து வணங்கி விடைபெற்றார். அருணாச்சல மலையையும் நமஸ்கரித்துவிட்டு அவர் தஹியா திரும்பினார்.

திருவண்ணாமலையிலிருந்து ஊர் திரும்பிய ராம்சுரத் குன்வருக்கு புற வாழ்வின் நாட்டம் குறைந்தது. தினமும் ஒரே விதமான புளித்துப் போன வாழ்க்கை வாழ்ந்து காலத்தை கடத்த அவர் விரும்பவில்லை. தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க விரும்பினார். தன் தவத்தைத் தீவிரப்படுத்தினார். எதிர்காலத்துக்காகப் பணம் சேகரிப்பதை நிறுத்தினார். பணத்தைக் கையாள்வதையும் தவிர்த்தார். அதுநாள்வரை சேகரித்த பணத்தை தன் மூத்த சகோதரனுக்கு அனுப்பினார். அவர் அனுப்பிய பணம் சகோதரனின் இரண்டு புதல்விகளின் திருமணத்துக்கு மிகவும் உதவியாக இருந்தது.

ராம்சுரத் குன்வர் ஆன்ம சாதனைகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் தன்னிடமுள்ள எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவார். தெருவில் வரும் பிச்சைகாரர்கள் வீட்டின் முன் நின்று பிச்சை கேட்டால் வீட்டில் உள்ள உணவுப் பதார்த்தங்களை உடனடியாகக் கொடுத்துவிடும்படி தன் மனைவியிடம் கூறுவார். குழந்தைகளுக்காகத் தயார் செய்யப்பட்ட உணவை பிச்சைக்காரர்களுக்கு அளிக்க அவர் மனைவி தயங்கினால் அவர் தனக்கென்று வைக்கப்பட்டுள்ள பாலையும், பழங்களையும் பிச்சைக்காரர்களுக்கு அளித்துவிடுவார். இதற்கு பயந்தே ராம்ரஞ்ஜனி தேவி தன் குழந்தைகளுக்கென்று தயார் செய்த உணவை பிச்சைக்காரர்களுக்கு அளித்துவிட்டு குழந்தைகளுக்கு மறுபடியும் உணவு தயார் செய்வார்.

ராம்சுரத் குன்வர் ஆனந்தாசிரமத்தில் இருந்து வாங்கி வந்த பப்பா ராமதாசரின் ‘இன் க்வெஸ்ட் ஆஃப் காட்‘ (In Quest of God) என்ற புத்தகத்தையும் ‘இன் த விஷன் ஆஃப் காட்‘ (In the Vision of God) என்ற புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்தார். ராமநாமம் சொல்லியவாறு தேச சஞ்சாரம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பப்பா ராமதாசர் அந்த இரண்டு நூல்களிலும் மிகவும் சுவாரஸ்யமாகவும் படிப்பவர் மனத்தில் துறவும், விடுதலையும் பக்தியும் ஒருங்கே ஏற்படும்படியாகவும் தொகுத்துக் கொடுத்திருந்தார். தெய்வத்தை நம்பியே வாழும் வாழ்க்கை எளிமையானது, சத்தியமானது, நிறைவானது, ஆனந்தமயமானது என பக்தர்கள் மனதில் பெரும் தாக்கத்தை அப்புத்தகங்கள் ஏற்படுத்தின. பப்பா ராமதாசரைப் பற்றி ராம்சுரத் குன்வர் ஆரம்பத்தில் கொண்ட சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் அப்புத்தகங்கள் துடைத்தெறிந்துவிட்டன. பப்பா ராமதாசரின் பரிபூரண பரமார்த்த நிலையை ராம்சுரத் குன்வர் புரிந்து கொண்டார். ராஜ வாழ்க்கை வாழும் சாதாரண சாது அல்ல பப்பா ராமதாசர், அவர் ஆன்மிகச் சக்கரவர்த்தியென ராம்சுரத்குன்வர் தெரிந்துகொண்டார்.

1950ல் ரமண மஹரிஷியும், ஸ்ரீ அரவிந்தரும் மறைந்தார்கள் அவர்கள் மறைந்த செய்தியைக் கேட்ட ராம்சுரத் குன்வர் துக்கத்தில் ஆழ்ந்தார். தான் ஆன்மீக வாழ்வில் அனாதையாக்கப்பட்டு விட்டதாக துடித்துப் போனார். இனி ஆன்மீக முன்னேற்றத்துக்கு எங்கு செல்வது, எவரிடம் செல்வது? ராம்சுரத் குன்வர் கலங்கிப்போனார். சட்டென்று பப்பா ராமதாசரின் சிரித்த முகம் அவர் மனதில் தோன்றியது. “நான் இருக்கிறேன்” என்று அபயஹஸ்தம் காட்டுவதும் தெரிந்தது. எனினும் அந்த வருடம் அவர் விரக்தியால் தெற்கே பயணம் செய்யவில்லை. மஹரிஷியின் மறைவு அவர் மனதில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. அதே வருடத்தில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘மாயா’ எனப் பெயரிட்டார்.

1950ல் அவர் இமயமலை சென்றார். ரிஷிகேஷில் சில நாட்கள் சொர்க்காசிரமத்தில் தங்கினார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என பல ஸ்தலங்களுக்குச் சென்றார். அங்கே வாழும் சாதுக்களும், சன்னியாசிகளும் அவருக்கு பெருந்துணையாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆன்மீக அனுபவங்களை ராம்சுரத் குன்வருடன் பகிர்ந்துகொண்டார்கள். இமய யாத்திரை அவருக்கு தெம்பூட்டுவதாகவும் தைரியமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் அவர் தனியாக தேச சஞ்சாரம் செல்வதற்கு இமயத்தில் கிடைத்த அனுபவம் பெரிதும் உதவியாக இருந்தது. இமயத்தில் வாழும் சாதுக்கள், சன்னியாசிகள் பற்றிப் பிற்காலத்தில் யோகி ராம்சுரத்குமார் பின்வருமாறு கூறினார்.

“இமயத்தில் தவம் செய்யும் சாதுக்களாலும், சன்னியாசிகளாலும் தான் இந்தப் பாரத பூமி காக்கப்படுகிறது. இவர்களின் ஆத்ம சக்தியால்தான் பாரதம் பாதுகாக்கப்படுகிறது.”

பப்பா ராமதாசரின் புத்தகங்கள் ‘இன் க்வெஸ்ட் ஆஃப் காட்‘ மற்றும் ‘இன் த விஷன் ஆஃப் காட்‘ ராம்சுரத் குன்வருக்கு ஆன்மீகபலம் அளித்துக்கொண்டே இருந்தன. 1951ம் ஆண்டு பப்பா ராமதாசரைத் தரிசனம் செய்ய ராம்சுரத் குன்வர் மிகவும் விரும்பினார். கோடை விடுமுறையில் அவர் முதலில் ஆனந்தாசிரமம் சென்றார். அங்கே பல நாட்கள் பப்பா ராமதாசரின் சன்னிதியில் இருந்தார். எனினும் பப்பா ராமதாசர் அவரை முற்றிலுமாக கவர்ந்துவிடவில்லை. இது குறித்து பிற்காலத்தில் யோகி ராம்சுரத்குமார் கீழ்க்கண்டவாறு கூறினார்.

“பப்பா இந்தப் பிச்சைக்காரனை அவரைப் புரிந்துகொள்ள அனுமதிக்கவில்லை. காலம் இன்னும் கனியவில்லை. இந்தப் பிச்சைக்காரன் பப்பாவின் தெய்வீகத்தை அவரே காட்டியருள மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.”

சுமார் ஒரு மாத காலம் ஆனந்தாசிரமத்தில் ராம்சுரத் குன்வர் தங்கியிருந்துவிட்டு பின் ஊர் திரும்பினார். பப்பா ராமதாசரின் நினைவும் ராம நாம உச்சாடனமும் அவரைக் குருவின் அருள்பெறத் தகுதிப்படுத்திக் கொண்டிருந்ததை ராம்சுரத் குன்வர் அறியவில்லை. அவர் பப்பா ராமதாசரை தன் குரு என்று அப்போது அறிந்திருக்கவில்லை. குருவருள் தனக்குள் வேலை செய்யும் ரகசியத்தையும் அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. குருவின் காரியங்கள் யாவும் உள்முகமாகவே இருக்கும் என்பதும் அவருக்குத் தெரியாது. அவரிடமிருந்து மாயை இன்னும் விலகவில்லை. சில சமயங்களில் தெய்வீக பரவச நிலையை, பரமானந்த நிலையை அடைந்தது போல் உணர்ந்தார். அந்த நிலை உறுதியானது, சத்தியமானது என்று கருதி அந்த நிலையில் தன்னை நிலைநிறுத்த முயன்றபோது அந்தப்பரவச நிலை மாயமாக மறைந்து போனது. ஒரு கணத்தில் குருவின், தெய்வத்தின் வாயிற்படியை அடைந்ததுபோல் இருந்தது. மறுநொடியில் அவர் எங்கோ அதலபாதாளத்தில் விழுந்து விட்டதைப் போல் உணர்ந்தார். மறுபடியும் அந்தத் தெய்வநிலையை, அந்த உன்னதமான பரவச நிலையை அடைய அவர் எவ்வளவோ முயன்றும் அது கைகூடவில்லை. மனதாலும், புத்தியாலும், அந்த அற்புத நிலையை அடைய முடியாது என்று அறிந்துகொண்டார். குருவின் திருவருள் இல்லாது மாயை விலகி பகவத் சாட்சாத்காரம் கிடைப்பது சாத்தியமில்லாத காரியம் என்பதை அவர் உணர்ந்தார். குருவின் அருளைப் பெறுவது எப்படி? குருவின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?

புனித ஷேத்திரங்களை சுற்றி வந்தும், பவித்திர நதிகளில் நீராடியும், அன்பான தர்மமான வாழ்க்கையை வாழ்ந்தும் தான் ஓரளவுதான் தூய்மையடைந்திருப்பதாக அறிந்தார். பரிபூரண நிலையை அடைவதற்கு இவை போதாது. ஆண்டவனிடம் ஒன்றுபட குருவின் தூய அருள் வேண்டும். பரமானந்த பரிபூரணப் பரமாத்மாவிடம் தன்னை சேர்ப்பிக்கும் சக்தி ‘குரு’ மட்டுமே என்று அவர் தெரிந்து வைத்திருந்த போதிலும் குருவை அடையாளம் கண்டு அவரது அருளைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் கூறியதை நினைவுகூர்ந்தார்.

“ஒரு ஞானியை (குருவை) காண்பது மிகவும் கடினம். அப்படியே கண்டாலும் அவரை ஞானி (குரு) எனத் தெரிந்துகொள்வது மிகமிகக் கடினம். அப்படியே தெரிந்து கொண்டாலும் ஞானியின் அருகாமையும் அருளையும் பெறுவது அதனினும் கடினம்.”

ரமண மஹரிஷியும், ஸ்ரீ அரவிந்தரும் மறைந்த பின் ராம்சுரத் குன்வருக்குச் சிறிது நம்பிகையூட்டி வந்தது பப்பா ராமதாசர் மட்டும்தான். எனினும், ராம்சுரத் குன்வர் மனதில் பப்பா ராமதாசர் மீது முழு நம்பிக்கை பிறக்கவில்லை. குருவருளன்றி இறைவனை அடைய வேறு மார்க்கம் இல்லை என்று உறுதியாக பல சாஸ்திர உபநிஷத்துக்கள் வாயிலாகவும், ஆதிசங்கரர் முதல் அனைத்து ஞானிகளும் செய்த உபதேச சாரங்கள் மூலமாகவும் ராம்சுரத் குன்வர் அறிந்துகொண்டார். தனது குரு யார்? அவர் பப்பா ராமதாசராக இருக்கலாம் அல்லவா? பப்பா ராமதாசரை மீண்டும் அணுகி அவரின் அருள்பெற முடிவு செய்தார். பப்பா ராமதாசரின் அருளை எப்பாடுபட்டாலும் பெற்றே ஆக வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார். 1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் நாள் அவர் வேலை பார்த்த நவல்கட் உயர்நிலைப்பள்ளியில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்தார். மனைவி ராம்ராஞ்ஜனி தேவி அப்பொழுது தனது நான்காவது குழந்தையைக் கர்பத்தில் சுமந்திருந்தார். மனைவியையும் மூன்று குழந்தைகளையும் ராம்சுரத் குன்வர் தஹியாவில் மாமனார் இல்லத்தில் விட்டுவிட்டு நேராக ஆனந்தாஸ்ரமம் சென்றார். பப்பா ராமதாசரின் அருளைப் பெறாது அவரை விட்டு அகல்வதில்லை என்று உறுதி பூண்டார்.

ஆனந்தாஸ்ரமத்தில் பப்பா ராமதாசரின் திருவடிகளை ராம்சுரத் குன்வர் கண்ணீர்மல்க கெட்டியாகப் பற்றி சரணடைந்தார். தன்னை சரணடைந்த பக்தனின் மனோபாவத்தை அறிந்துகொண்ட பப்பா ராமதாசர் ஆனந்தமாகச் சிரித்தார். தனது பக்தன்தீட்சை பெறும் பரிபக்குவம் அடைந்து தன் திருவடியில் சரணடைந்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. வீழ்ந்து வணங்கிய ராம்சுரத் குன்வரை பப்பா ராமதாசர் முதுகில் தட்டி ஆசிர்வதித்தார். பப்பாவின் ஸ்பரிசத்தால் பேரானந்தத்தில் ராம்சுரத் குன்வர் மூழ்கினார். அவர் தன் தந்தையின் மடியில் பாதுகாப்பாக ஒரு குழந்தைபோல் இருப்பதை உணர்ந்தார். முதன்முதலாக ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசர்தான் தன்னை ஆட்கொள்ள வந்திருக்கும் தெய்வம், குரு என்பதை உணர்ந்தார். அந்த உணர்வு அவருக்கு மிகுந்த ஆனந்தமளித்தது. ஆசிரமத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது.

ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசரை நிழல் போல் தொடர்ந்தார். பப்பா ராமதாசர் தன் பிரியமான ராம்சுரத் குன்வர்மேல் தன் அருள்மழையைப் பொழிந்தார். அவரோடு நீண்ட நேரம் உரையாடினார். தனித்திருக்கும்போது ராம்சுரத் குன்வர் வாழ்வில் நடந்த சில உன்னதமான ரகசியமான ராம்சுரத் குன்வர் மட்டுமே அறிந்திருந்த சில சம்பவங்களைப் பப்பா ராமதாசர் விவரித்தபோது தன் குருநாதர் பப்பா ராமதாசரே என முழுமையாக ராம்சுரத் குன்வர் அறிந்துகொண்டார். பப்பா ராமதாசர் மீது அவர் கொண்ட பக்தி தீவிரமடைந்தது. குருவின் அண்மையும், பேரருளும் ராம்சுரத் குன்வரை உன்மத்த நிலைக்கு தள்ளியது. பப்பா ராமதாசரிடம் மந்திர தீட்சை பெறவேண்டும் என்ற ஆவல் ராம்சுரத் குன்வரிடம் ஏற்பட்டது. தன்னிடம் மிகப்பிரியமாக இருக்கும் தன் குருநாதரிடம் தனக்கு மந்திர தீட்சை பண்ணிவைக்க வேண்டுமென்று எப்படிக் கேட்பது? குருநாதனுக்குத் தெரியாதா தனக்கு எது தேவையென்று? ராம்சுரத் குன்வர் மனதில் மாறி மாறி மந்திர தீட்சையைப் பற்றிய எண்ணங்கள் வந்தவாறு இருந்தன. மனதில் குழப்பமும், பயமும் தோன்றியது. பப்பா ராமதாசரிடம் போய்க் கேட்பதா? அவருக்குத் தெரியாதது ஒன்றுண்டா? எனினும் மந்திரதீட்சை பெறவேண்டுமென்ற தீராத அவா அவரை விட்டபாடில்லை. இதுகுறித்து சுவாமி சச்சிதானந்தரிடம் ராம்சுரத் குன்வர் ஆலோசனை கேட்டார். சுவாமி சச்சிதானந்தர் மந்திர தீட்சை கேட்பதற்கு ஏன் தயக்கம் கொள்ள வேண்டுமென தைரியம் அளித்தார்.

1952ம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலோ ராம்சுரத் குன்வரின் வாழ்க்கையில் இந்த முக்கியமானசம்பவம் நிகழ்ந்தது. சுவாமி சச்சிதானந்தர் கொடுத்த ஊக்கத்திலும் தைரியத்திலும் ராம்சுரத் குன்வர் அன்று பப்பா ராமதாசரை விடாது பின்தொடர்ந்து சென்றவண்ணம் இருந்தார். பப்பா ராமதாசரிடம் மந்திர தீட்சை பெறாமல் அன்று அவரை விட்டு அகலப் போவதில்லை என்ற முடிவில் ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசரை பின்தொடர்ந்து சென்றார். பப்பா ராமதாசர் சிரித்தபடியே சென்றுகொண்டிருந்தார். கோசாலை செல்லும்வழியில் பப்பா ராமதாசர் சென்றுகொண்டிருந்தார். பப்பா ராமதாசருடன் ஒரு சில பக்தர்களும் சென்று கொண்டிருந்தனர். ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசர் தனக்கு மந்திர தீட்சை அளிக்க வேண்டுமென்ற தீவிர பிரார்த்தனையுடன் பக்தர்களோடு அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். பப்பா ராமதாசர் ஓரிடத்தில் திடீரென நின்றுவிட்டார். பின்னால் வந்துகொண்டிருந்த ராம்சுரத்குன்வரைப் பார்த்து பக்கத்தில் வருமாறு சைகை செய்தார். ராம்சுரத் குன்வர், பப்பாவின் அருகில் சென்றார்.

“ராமதாசர் உனக்கு மந்திர தீட்சை அளிக்க வேண்டுமென்று விரும்புகிறாயா?”

பப்பா ராமதாசர் வினவினார். ராம்சுரத் குன்வர் மெதுவாக ஆனால் திடமாக ‘ஆம்‘ எனச் சொல்வதுபோல் தலை அசைத்தார். உடனே ராமதாசர் அங்கேயே தரையில் அமர்ந்துகொண்டார். ராம்சுரத் குன்வரையும் தன் முன்னால் அமரவைத்தார்.

“ராமதாசர் சொல்வதை திருப்பிச் சொல்வாயாக.” பப்பா உத்தரவிட்டார்.

“ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” ஒவ்வொரு சொல்லாக பப்பா ராமதாசர் தன் ஆத்மசக்தியெல்லாம் அச்சொற்களில் நிரப்பி உச்சரிக்க, அதை ராம்சுரத் குன்வர் அப்படியே அச்சக்தியை தன்னுள் வாங்கிக்கொண்டு பப்பா ராமதாசர் உச்சரித்தவாறு மந்திரத்தை உச்சரித்தார். மூன்று முறை மந்திர உபதேசம் செய்யப்பட்டது. மந்திர உபதேசம் மூலம் செலுத்தப்பட்ட அந்தப் பரிபூரண, பவித்ரமான,பேரானந்த, ஆத்மசக்தி ராம்சுரத் குன்வரிடம் பூரணமாகக் குடியேறியது பப்பாவிடம் சுடர்விட்டொளிர்ந்த ஆத்ம தீபம் மற்றொரு தீபத்தை ராம்சுரத் குன்வரிடம் ஏற்றியது. ஏற்றப்பட்ட தீபத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை பப்பா ராமதாசர் ஏற்றுக்கொண்டார். இளம் தீபம் நிலைபெற்று பெரும்சுடராகப் பிரகாசிக்கும் உகந்தசூழ்நிலைகளைப் பப்பா ராமதாசர் உருவாக்க ஆரம்பித்தார்.

“போ, இந்த ராம மந்திரத்தை 24 மணி நேரம் உச்சாடனம் செய்வாயாக.”

பப்பா ராமதாசர் ராம்சுரத் குன்வருக்கு உத்தரவிட்டார். இயற்கையிலேயே வளம் பொருந்திய ராம்சுரத் குன்வரின் இதயத்தில் ஆன்மீக விதை விதைக்கப்பட்டது. ராம்சுரத் குன்வரின் சிறு தேகம் அந்தப் பிரமாண்டமான பரமாத்ம பெருஞ்சுடரைத் தாங்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டது. அந்தப் பெருஞ்சுடரான சக்தி மிகவும் அகன்று விரிந்து திடமாக இருந்தது. அதன் சுடர் மேன்மேலும் பிரகாசித்து அதன் உக்கிரமான வெப்பம் அவரைத் தகித்துக் கொண்டிருந்தது. ராம்சுரத் குன்வர் அச்சக்தியின் பாரத்தைச் சுமக்க மிகவும் சிரமமடைந்தார். அவர் மெதுவாக எழுந்தார். தட்டுத்தடுமாறிப் பப்பா ராமதாசரை நமஸ்கரித்தவாறு அவ்விடத்தில் இருந்து சென்றார்.

தனக்குள் ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி புகுந்து தன்னுடன் இருந்த அனைத்தையும் பஸ்பம் செய்வது போல் உணர்ந்தார். அவருக்குள் எதுவும் இல்லை. எல்லாம் எரிக்கப்பட்டு சாம்பலாகிப் போனது. அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் ஏன் அழுதார்? அவருக்கே தெரியவில்லை. அங்கே என்ன நடந்தது? புரியவில்லை. அவர் மெதுவாக நடந்தார். எங்கே செல்ல வேண்டுமென்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த மலைக்குன்றின் மீது ஏறினார். குன்றின் உச்சியில் ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அதில் அமர்ந்தார். அடக்க முடியாதவாறு கதறி அழுதார். நீண்ட நேரம் அழுகை. அழுகை அடங்கியது. ஆழ்ந்த அமைதி அவருள் பரவியது. பின் ஒருவித பரமானந்த நிலை. புன்முறுவல் பூத்தார். புன்முறுவல் சிரிப்பாக மாறியது. பின் அலையலையாய் ஆனந்தச் சிரிப்பு அவரிடமிருந்து வந்துகொண்டே இருந்தது. ஒருவித உன்மத்த நிலைக்கு ராம்சுரத் குன்வர் தள்ளப்பட்டார்.

பகலவன் மேற்குக் கடலில்மூழ்கிக் கொண்டிருந்தான். இரவு இருட்டிக் கொண்டு வந்தது. நட்சத்திரங்கள் மினுமினுக்க ஆரம்பித்தன. அந்த பென்ஞ்சில் அவர் மல்லாந்து படுத்து ஆகாயத்தை உற்று நோக்கினார். அங்கே ஏதேதோ தெய்வீகச் சக்திகள் உலா வந்து கொண்டிருந்தன. திடீரென அவருடைய உணர்வுகள் காணாமல் போய்விட்டன. எண்ணங்கள் மாயமாய் மறைந்துவிட்டன. பேரமைதி அவரிடம் தோன்றியது. அந்த அமைதியிலிருந்து ஒரு ஓசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அந்த ஓசை சக்தி பெற்றது. ராம்சுரத் குன்வர் அந்த ஓசையை உற்றுக் கேட்டார். அவர் தேகம் சிலிர்த்துவிட்டது. அது பப்பா ராமதாசர் அவருக்கு அருளிய ராம மந்திரம். “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” பப்பாவின் குரலிலேயே ராம மந்திரம் தெளிவாக உரக்கக் கேட்டது. நேரம் செல்லச் செல்ல ராம்சுரத் குன்வரின் ஒவ்வொரு அணுவும் பப்பாவின் குரலில் ராம மந்திரம் சொன்னது. பப்பாவும் ராம மந்திரமும் ராம்சுரத்குன்வரும் அந்த ஆன்மீகப் பரவெளியில் ஒன்று கலந்தார்கள். இரவெல்லாம் இந்தக் கூடலின் ஆனந்தப் பரவசத்தில் ராம்சுரத் குன்வர் களித்திருந்தார்.

பொழுது புலர்ந்தது. மலையிலிருந்து கீழே இறங்கினார். உள்ளே ஒலித்திருந்த ராமநாமத்தை ராம்சுரத் குன்வர் பலத்த குரலில் உச்சாடனம் செய்தவாறு மலையிலிருந்து கீழே இறங்கினார். ஆசிரம வளாகத்தில் பேரானந்தக் களிப்பில் அவர் இங்கும் அங்கும் ஓடினார். ஆனந்தக் கூத்தாடினார். யார் அவரிடம் பேச வந்தாலும் “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என்று மிக உரத்த குரலில் பாடினார். அவரது பரவசநிலை மற்றவர்களைப் பயமுறுத்தியது. சிலர் அவரை ஆசுவாசப்படுத்தி உணவு கொடுத்தார்கள். பின்னர் பப்பா ராமதாசரிடம் அழைத்துச் சென்றார்கள். பப்பா ராமதாசர் தன் பிரியமான பக்தன் ராம்சுரத் குன்வரிடம் தெய்வீக உன்மத்த நிலையைக் கண்டு சந்தோஷமடைந்து பெரும் சிரிப்புச் சிரித்தார்.

“எங்கே செல்வதாக உத்தேசம்?” பப்பா ராமதாசர் கேட்டார்.

“திருவண்ணாமலை“ சட்டென்று ராம்சுரத் குன்வர் பதிலுரைத்தார்.

திருவண்ணாமலை என்று ராம்சுரத் குன்வர் சொன்னாலும், பப்பா ராமதாசரை விட்டு அகல அவரால் முடியவில்லை. அவரது மந்திர தீட்சை ராம்சுரத் குன்வரின் உள்ளே மறைந்திருந்த ஆத்மச் சுடரை பிரகாசமாக வெளிக்கொணர்ந்தது. அதன் வெப்பத்தில் ராம்சுரத் குன்வரின் அடக்கி வைக்கப்பட்ட ஆசாபாசங்கள், நன்மை தீமை, பாவம் புண்ணியம் போன்ற வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்களும் ஆண்டவனைப்பற்றிய கற்பனைகளும், கட்டுப்பாடுகளும் பஸ்பமாயின. பப்பா ராமதாசரின் மந்திர தீட்சை அவரை மாயையாக்கி, அவரது அடையாளத்தை அழித்தது. இந்தப் பரிணாம வளர்ச்சி பெரும் வேதனையைக் கொடுத்தது. அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அந்த வலியில் ராம்சுரத் குன்வரை பப்பா ராமதாசர் துடிதுடிக்க வைத்தார். ராம்சுரத் குன்வர் அந்த வலியிலிருந்து தப்பிக்க முயற்சி ஏதும் செய்யவில்லை. அந்த வலியையும் பப்பா ராமதாசரின் அருள்கொடை என்றே கருதினார்.

சில நாட்கள் கழிந்தன. பப்பா ராமதாசர், மாதாஜி கிருஷ்ணாபாய் மீது பக்தி செலுத்தி அவர்களுக்கு சேவை செய்வது ஒன்றே, தான் செய்யக்கூடிய கர்மம் என எண்ணினார் ராம்சுரத் குன்வர். ஆனால் அவர்கள், இந்த உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உத்தம பக்தனை ஆன்மிக வளர்ச்சியின் உச்சியில் அமரவைத்து, மற்ற பக்தர்களுக்கும் சாதர்களுக்கும், துன்புறும் மனிதர்களுக்கும் அருள்பாலிக்கும் லோக குருவாக மாற்ற முடிவு செய்தார்கள். இப்பேர்பட்ட புனிதமான, உத்தமமான பக்தனை தங்களிடம் வைத்துக்கொள்வதைவிட லோக ஷேமத்துக்காக அவரைப் பலவந்தமாய் புற உலகுக்குத் தள்ளிவிடுவதே அவர்களின் சித்தமாக இருந்தது. தங்களின் சொரூபங்களிலிருந்து ராம்சுரத் குன்வரை தூரப்படுத்துவதை குறியாகக் கொண்டார்கள். ராம்சுரத் குன்வரை ஒரு பைத்தியம் போல் நடமாட வைத்தனர். அவரிடம் மிகவும் கோபமாக நடந்துகொண்டார்கள். பல பக்தர்களுக்கு முன் அவரை வசை பாடினார்கள். பப்பா ராமதாசரின், மாதாஜி கிருஷ்ணாபாயின் நெருங்கிய பக்தன் என்ற கர்வம் அவருடைய உள்ளத்திலிருந்து அகல, அனைத்துத் திருவிளையாடல்களும் புரிந்தனர். எனினும், ராம்சுரத் குன்வரின் இந்தக் கர்வம் போவதற்கு மிகவும் நீண்டகாலமாயிற்று. இந்தச் செயலில் ராம்சுரத் குன்வர் அடைந்த துயரம் சொல்லில் அடங்காது. பிற்காலத்தில் பப்பா ராமதாசர் செய்த இந்தத் திருவிளையாடல் பற்றியும் அது தந்த பெருவேதனைகள் பற்றியும் யோகி ராம்சுரத்குமார் பின்வருமாறு கூறினார்.

“என் தந்தை சுவாமி ராமதாசர் போல் யாரும் இந்தப் பிச்சைக்காரனை நேசிக்கவும் முடியாது, அதேபோல் என் தந்தை சுவாமி ராமதாசர்போல் இந்தப் பிச்சைக்காரனை யாரும் சித்ரவதை செய்யவும் முடியாது. என் தந்தை சுவாமி ராமதாசர் இந்தப் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டார். ஏனெனில் அவர் இந்தப் பிச்சைக்காரனை மிகவும் நேசித்தார்.”

மந்திர தீட்சை பெற்று மூன்று வாரங்கள் கடந்தோடின. ராம்சுரத் குன்வர் உன்மத்தம் பிடித்து, மதயானை போல் ஆசிரம வளாகத்தில் நடமாடினார். உரத்த குரலில் “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என்று பாடியபடி நடனமாடினார். எவர் சொல்லையும் சட்டை செய்யவில்லை. ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவரது பேரானந்தக் கூத்தைப் பார்த்து மற்ற பக்தர்கள் அஞ்சினார்கள். முடிவில், பப்பா ராமதாசரும் மாதாஜி கிருஷ்ணாபாயும் ராம்சுரத் குன்வரை ஆசிரமத்திலிருந்து வெளியேற்றினார்கள். வெளியேற்றப்பட்ட ராம்சுரத் குன்வர் திருவண்ணாமலை வந்தடைந்தார். அருணாச்சல மலையில் அவர் தனியாக சஞ்சாரம் செய்தார். எவரும் போக அஞ்சும் குகைகளிலும், அடர்ந்த வனத்திலும் தனியாக வாசம் செய்தார். ராம மந்திரம் அவரை விடாது பற்றிகொண்டது. தூக்கம் தொலைந்தது. பல நாட்கள் உணவு அருந்தாமல் இருந்தாலும், அவர் தேகத்தில் தளர்ச்சியோ சோர்வோ ஏற்படவில்லை. ராமமந்திரம் அவருள் இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருந்தது.

பப்பா ராமதாசரையும் மாதாஜி கிருஷ்ணாபாயையும் மீண்டும் தரிசிக்க ஆவல் பிறந்தது. ரயிலேறி ஆனந்தாசிரமம் பயணப்பட்டார். வழியில் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கினார். தன்னை அறியாமல் ரயில் தண்டவாளத்தின் அருகிலேயே ஒருவித உன்மத்த நிலையில் நடக்க ஆரம்பித்தார். புற உலகமோ அதன் ஓசைகளோ அவரது கண்களிலும் காதிலும் விழவில்லை. பின்னாலிருந்து வந்த ஒரு ரயில் இன்ஜின் அவர் மீது மோதியது. அவரது இடது கையும், இடது காலும் காயப்பட்டன. சுமார் இரண்டு மாத காலம் ஈரோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சையெடுக்க நேர்ந்தது. ஆனந்தாசிரமம் பப்பா ராமதாசரின் குஜராத்தி பக்தர் ஒருவர் தெய்வாதீனமாக ராம்சுரத் குன்வரை அடையாளம் கண்டு அன்போடு பராமரித்தார். அவரது உறவினர்களுக்கும் தகவல் அனுப்பினார். ராம்சுரத் குன்வரின் நண்பர்கள் ராம்தத்சௌத்ரியும், ராம்ஜீவன் ராயும் ஈரோடு வந்து அவரை அழைத்துக்கொண்டு தஹியா சென்றார்கள்.

தஹியாவிலும் ராம்சுரத் குன்வர் தனிமையிலேயே காலத்தைக் கழித்தார். பாலன் நதிக்கரையில் உள்ள அடர்ந்த வனாந்திரத்திலும், அங்குள்ள சிவன் கோவிலிலும் பகல் நேரப் பொழுதைக் கழித்தார். இரவில் வீடு சென்றார். எவரிடமும் பேசவில்லை. யார் அவரோடு பேச முற்பட்டாலும், “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என உரக்கப் பாட ஆரம்பித்துவிடுவார். எனவே, குடும்பத்தார் அனைவரும் அவரிடமிருந்து விலகியே இருந்தனர். ராம்சுரத் குன்வரின் மனைவி ஸ்ரீமதி ராம்ரஞ்ஜனி தேவி தன் கணவரின் நிலையைக் கண்டு மிகவும் கலங்கினார். அவரை மீண்டும் பழைய ராம்சுரத் குன்வராக மாற்ற பெரும் முயற்சி செய்தார். ராம்சுரத் குன்வரின் கால்களைப் பற்றிக்கொண்டு கதறி அழுதார். சில நாட்கள் கடந்தன. ராம்ரஞ்ஜனி தேவியின் கதறல்கள் ராம்சுரத் குன்வரின் காதில் விழுந்தன. ஆனாலும் அவர் விடாது மௌனம் காத்தார்.

ராம்சுரத் குன்வருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகப் பேசினார்கள். ஊராரின் புரளியினால் பாதிக்கப்பட்ட ராம்ரஞ்ஜனி தேவி கணவரையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் கணவர் வேலை பார்க்கும் நவல்கட்டுக்குச் சென்றார். கணவனிடம் மன்றாடி, அவரை மீண்டும் ஆசிரியர் வேலை பார்க்க அனுப்பினார். ராம்சுரத் குன்வர் இறுதியாக 28.1.1953ம் நாளும் 30.1.1953ம் நாளும் பள்ளியில் வேலை பார்த்தார். கடைசியாக வேலை பார்த்த இரண்டு நாட்களுக்கு அவருக்கு 18 ரூபாயும் 11 காசுகளும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அவர் வேலைக்குச் செல்லவில்லை. நவல்கட் ஊரில் பித்துப் பிடித்தவர் போல் ராம நாமத்தை உரக்கக் கூறியபடி ஓடினார். மரத்தடியில் விழுந்து கிடந்தார். அந்த ஊரிலேயே மிகவும் கௌரவமான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி, எல்லோராலும் மதிக்கப்பட்ட கனவானான ராம்சுரத் குன்வர் பித்துப் பிடித்த பிச்சைக்காரன் போல் ஊரில் சுற்றி அலைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. எவரேனும் அவரிடம் பேசி அவரைப் பழையபடி நிதான நிலைக்கு கொண்டுவர முயற்சித்தால் ராம்சுரத் குன்வர் உடனடியாக “ஓம் ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என உரக்கப்பாட ஆரம்பித்து விடுவார். ராம்சுரத் குன்வரை மாற்ற வந்தவர் நிலை தடுமாறி ஓடிவிடுவார். எவரேனும் பிரியமாக உணவளிக்க முற்பட்டால் அவரிடமிருந்து பாலும், பழங்களும் மட்டும் ராம்சுரத் குன்வர் பெற்றுக்கொண்டு அருந்துவார். இந்த மாற்றத்தை ஊரே பேசி திகைத்து நின்றது. கர்ப்பிணியான ராம்ரஞ்ஜனி தேவி கணவனது நிலையைக் கண்டு கதிகலங்கி தன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு ‘பீனா‘ என்று பெயரிட்டார்.

ராம்ரஞ்ஜனி தேவியின் சகோதரர்கள் தமக்கையின் கணவரின் உன்மத்த நிலையைக் கண்டு அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கருதினார்கள். அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ராம்சுரத் குன்வரை கட்டாயப்படுத்தி ராஞ்சிக்கு அழைத்துச் சென்று மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில் அங்குள்ள வைத்தியர்கள் அவருக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டனர். ராம்ரஞ்ஜனி தேவியின் சகோதரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ராம்சுரத் குன்வரின் மூத்த சகோதரரான மனரக்கன் குன்வரை வரவழைத்து அவரோடு ராம்சுரத் குன்வரை நர்தராவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சில நாட்கள் அவர் இருந்தார். பின்னர் அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார்.

பப்பா ராமதாசரின் மந்திர தீட்சைக்குப் பின் ராம்சுரத் குன்வரிடம் பிரமிக்கத்தக்க மாறுதல் ஏற்பட்டது. ராம்சுரத் குன்வர் என்ற அடையாளம் அழிக்கப்பட்டது. அதனால் அவரது குடும்பம், சுற்றம், நட்பு, உலகம் அனைத்தும் அவருக்கு அன்னியமாகப் போய்விட்டது. மனைவியையும், குழந்தைகளையும் பார்க்கும்போது சில நேரங்களில் அவருக்கு வேதனை ஏற்பட்டாலும், நொடியில் அந்தப் பச்சாதாபம் போய்விடும். மீண்டும் அங்கே அந்த பழைய ராம்சுரத் குன்வர் இருக்கமாட்டார். அவர் மறைந்த அந்த இடத்தில் தெய்வம் முழுமையாக குடியேறி அவருடைய ஒவ்வொரு அணுவும் புனரமைக்கப்பட்டு புனிதமாயின.

ராம்சுரத் குன்வரிடம் குடிகொண்ட அந்தப் பரம்பொருளே அவரை வழிநடத்தியது. அவரை பாரதக் கண்டம் முழுக்க சஞ்சாரம் செய்ய வைத்தது. எங்கெல்லாம் ஞானிகள் வாழ்ந்தனரோ அங்கெல்லாம் அவரை அழைத்துச் சென்றது. மதமாச்சரியங்கள் கடந்த யோகியரையும், ஞானிகளையும் தரிசிக்க வைத்தது. இருப்பினும் அவருள் எங்கோ ஒரு சிறு இடத்தில் அவரது மனைவியான ஸ்ரீமதி ராம்ரஞ்ஜனி தேவி வாசம் செய்துவந்தார். 1955ம் ஆண்டு தன் மனைவியைக் காண ஆவல் பிறந்தது. தஹியா சென்றார். மனைவியைச் சந்தித்தார். மனைவி கதறி அழுதார்.

ராம்சுரத் குன்வருக்கு அவரைச் சமாதானப்படுத்தும் வழிமுறை தெரியவில்லை. கல்லாகிக் கரையாமல் நின்றார். சுற்றத்தார் அனைவரும் வசை பாடினர். ராம்ரஞ்ஜனி தேவி அவர்களைத் தடுத்தார். கணவனின் காலில் மறுபடியும் வீழ்ந்து, தன்னையும் குழந்தைகளையும் அவரோடு அழைத்துச் செல்ல வேண்டினார். எங்கு சென்றாலும், எவ்வளவு சிரமமடைந்தாலும் அவர் நிழலிலே வாழ்ந்து விடுவதாகச் சொன்னார். கல்லான ராம்சுரத் குன்வர் சற்றே கரைந்தார். தன் குருநாதன் பப்பா ராமதாசர் திருவடிகளிலேயே தன் குடும்பத்தாரோடு சரணடைய நினைத்தார். குரு நாதரைத் தவிர தனக்குவேறு கதியில்லை என்று எண்ணினார். பள்ளியில் படிக்கும் மூத்த இரண்டு குழந்தைகளையும் ராம்ரஞ்ஜனி தேவியின் சகோதரர்கள் தங்களோடு வைத்துக்கொண்டனர், இளைய பிள்ளைகளோடு தம்பதியர் பப்பா ராமதாசரைச் சரணடைய ஆனந்தாசிரமம் சென்றனர். பப்பா ராமதாசரின் தாள் பணிந்தனர்.

“பப்பா, என் மனைவி குழந்தைகளோடு நான் உங்களைத் தஞ்சமடைந்தேன். என்னையும் என் குடும்பத்தாரையும் ஆசிரமத்தில் தங்கவைத்து உங்களுக்குச் சேவை செய்ய அருள் புரியவேண்டும் பப்பா. தாங்கள் அளித்த மந்திர தீட்சைக்குப் பின் என்னால் வேறு எங்கும் இருக்கமுடியவில்லை பப்பா. எனவே தங்கள் நிழலில் எங்களை வாழ அனுமதியுங்கள் பப்பா” ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசரிடம் கெஞ்சினார். பப்பா ராமதாசர் மௌனம் காத்தார். பக்கத்தில் இருந்த மாதாஜி கிருஷ்ணாபாய் குழந்தைகளோடு ஆசிரமத்தில் இருப்பது சாத்தியமில்லை என்று உறுதிபடக் கூறினார்.

தம்பதிகள் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். ராம்சுரத் குன்வர் குழந்தைகளை தஹியாவில் ராம்ரஞ்ஜனி தேவியின் சகோதரர்கள் வசமோ அல்லது நர்தராவில் தன்னுடைய சகோதரர் வசமோ விட்டுவிட்டு தாங்கள் இருவர் மட்டும் ஆனந்தாசிரமத்தில் வாசம் செய்யலாமா என மனைவியிடம் ஆலோசனை கேட்டார். ராம்ரஞ்ஜனி தேவி குழந்தைகளை பிரிந்து தன்னால் வாழ முடியாது என்று அழுத்தந்திருத்தமாகக் கூற, ராம்சுரத் குன்வர் திகைத்து நின்றார். மீண்டும் பப்பாவிடம் சென்றார்.

“பப்பா, உங்கள் மீதுள்ள பெரும் நம்பிக்கையில் இங்கே குடும்பத்தோடு வந்துவிட்டேன். நீங்கள் எங்களை விரட்டினால் நான் எங்கே செல்வேன்? என்னசெய்வேன்?” ராம்சுரத் குன்வர் பப்பா ராமதாசரிடம் கெஞ்சினார்.

“போ, பிச்சை எடு, நீ ஆசிரமத்தில் தங்க முடியாது. ஆசிரம வேலைகளைச் செய்வதற்கு ஏற்கனவே இங்கே தேவையான நபர்கள் இருக்கிறார்கள். இதை நினைவில் கொள். ஒரு பெரிய மரத்தின் கீழ் இன்னுமொரு பெரிய மரம் வளரவே முடியாது. புல் பூண்டுகள்தான் அங்கே முளைக்கும்.”

பப்பா உரத்த குரலில் சொன்னார்.

“பப்பா, நான் பிச்சை எடுக்க வேண்டுமா? நான் பிச்சைக்காரனா பப்பா?”

ராம்சுரத் குன்வர் பரிதாபமாகக் கேட்டார். பப்பா ராமதாசர் பதில் சொல்லாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

( இந்தச் சம்பவத்தை ராம்ரஞ்ஜனி தேவி என்னிடம் 2003ல் விவரிக்கும்போது, “அன்று மட்டும் நான் குழந்தைகள் இல்லாமல் வாழமுடியாது என்று சொல்லாமல், நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று சொல்லியிருந்தால் அவர் என்னைவிட்டுப் பிரிந்து போயிருக்கமாட்டார்.” என்று கண்ணீர் மல்கக் கூறியதை இன்று நினைத்தாலும் அந்த உத்தம தேவியைக் கைகூப்பி வணங்கத் தோன்றுகிறது.)

அன்று முதல் ராம்சுரத் குன்வர் பிச்சைக்காரனானார். மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு சென்னை வழியாக ஊர் திரும்பினார். கையில் போதிய பணமில்லாததால், சென்னை தெருக்களிலே அவர் முதன் முறையாக பிச்சை எடுத்தார். பிச்சை எடுத்துக் கிடைத்த உணவை மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அளித்தார். சில தினங்கள் எடுத்த பிச்சையில் ஊர் திரும்பும் அளவுக்குப் பணமும் சேர்ந்தது. அதுவரை அவர் குடும்பத்தோடு ரயில்நிலையத்தில் வாசம் செய்தார்.

1950களில் ஒரு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஒரு கனவான், தன் குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் பிச்சைக்காரனாக மாறிய இந்தத் திருவிளையாடலை என்னவென்று சொல்லுவது?

மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் தஹியாவில் விட்டுவிட்டு, ராம்சுரத் குன்வர் மீண்டும் மறைந்துவிட்டார்.அவர் எங்கெல்லாம் தேச சஞ்சாரம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. ஆனால் பாரதகண்டத்தில் எங்கெல்லாம் ஞானிகள் வாசம் செய்திருந்தனரோ, அங்கெல்லாம் அவர் சென்றார் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

bottom of page